“முஸ்லிம் அல்லாதார் மீது இஸ்லாமியச் சட்டங்களை அமலாக்குவது பாஸ் தோற்றத்தைப் பாதிக்கும்”

கிளந்தானில் உள்ள முஸ்லிம் அல்லாதாருக்கு  இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பாஸ் கட்சியின் மிதவாதத் தோற்றத்தைப் பாதிக்கும் என டிஏபி இளைஞர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் அந்தோனி லோக் எச்சரித்துள்ளார்.

இது பக்காத்தான் ராக்யாட் மீதான முஸ்லிம் அல்லாதாரின் நம்பிக்கையை ஒரளவுக்குப் பாதித்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

“பாஸ் உயர் தலைமைத்துவம் குறிப்பாக கிளந்தானில் பாஸ் மிதவாதக் கட்சி என்னும் தனது தோற்றம் மீது முஸ்லிம் அல்லாதாரின் நம்பிக்கையை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு அந்தப் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும்,” என்றும் லோக் கேட்டுக் கொண்டார்.

அவர் இன்று கோலாலம்பூரில் டிஏபி சோஷலிச இளைஞர் பேரவையைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தாங்கள் வாகனத்திலிருந்து விமானங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு ‘நாகரீகமற்ற நடவடிக்கைக்காகவும்’  பகல் நேரத்தில் பூங்கா ஒன்றில் இருந்த முஸ்லிம் அல்லாத ஜோடி ஒன்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்ட அண்மைய சம்பவங்கள் பற்றி லோக் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கும் விதிமுறைகளை அமலாக்காத கிளந்தான் முடி திருத்தும் நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அந்த விஷயத்தை தீர்ப்பதற்கு சில உருப்படியான யோசனைகளை டிஏபி ஏற்கனவே தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் பாஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரசியல் எதிரிகள் முக்கிய தேசியப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கு நாம் ஆயுதங்களை வழங்காமல் இருப்பதற்கு விரைவான தீர்வு அவசியம் என்றும் லோக் சொன்னார்.

பல இன சமுதாயத்திற்கு ஹுடுட் சட்டங்கள் பொருத்தமானவை அல்ல என்பதில் டிஏபி உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மசீச-வைப் போன்று டிஏபி இஸ்லாத்தை சிறுமைப்படுத்தியதில்லை. அடுத்த பொதுத் தேர்தலில் பிகேஆர், பாஸ் ஆகியவற்றுடன் இணைந்து போராட டிஏபி உறுதி பூண்டுள்ளது.”

“டிஏபி பிகேஆர்-உடனும் பாஸ் கட்சியுடனும் தொடர்ந்து இருக்க வேண்டும். பக்காத்தான் ராக்யாட் ஒற்றுமையே அம்னோ/பிஎன் பயங்கரக் கனவாகும்,” என்றும் லோக் சொன்னார்.

“நாம் சிதறினால் அது பிஎன் -னுக்கு மகிழ்ச்சியான கனவாகி விடும். ஏனெனில் அது 13வது பொதுத் தேர்தலில் போட்டியில்லாத வெற்றியைக் கொடுப்பதற்கு ஒப்பாகி விடும்.”

TAGS: