இந்தியர் பொருளாதார மேம்பாட்டுக்கான 10 அம்சங்களை மஇகா பிரதமரிடம் வற்புறுத்த பக்காத்தான் உதவும்

-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், டிசம்பர் 9, 2012.

பிரதமர் நஜிப் துன் ராசாக் இன்று  தெடக்கிய 66 வது ம.இ.கா பொதுப் பேரவையில் என்ன சொல்லப் போகிறார் என்பது  இந்தியச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரின் கேள்விகளாக இருந்திருக்கும்.

அண்மையில்  சுங்கை சிப்புட்டில்  நிகழ்த்திய தீபாவளி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில்  இந்திய சமூகத்திற்கு  அரை பில்லியன் வெள்ளிகளை  ஒதுக்கீடு செய்துள்ளதாகப் பிரச்சாரம்  செய்துள்ளார்.  நமது மக்களின் ஏழ்மையை  ஒழிக்க அது போதாது என்பதால்  மாற்றுத்திட்டங்களை பிரதமரிடம் ம.இ.கா எடுத்து வைக்க வலியுறுத்தி தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பி இருந்தோம். அதனை பிரசுரித்த தினக்குரலுக்கு நன்றி.  அதன் பிரதியை செம்பருத்தி வாசகர்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.

பிரதமர் வெட்கப்பட வேண்டும்

இந்நாட்டில் கடுமையான ஏழ்மையில் வாடும்  இந்திய சமூகத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகால மொத்த ஒதுக்கீடாக அரை பில்லியன் ரீங்கிட்டுகளை  ஒதுக்கியுள்ளதாகக் கூறும் பிரதமர்  அதனைத் தன் சாதனையாகக் கருதுவதால் அதை சுங்கை சிப்புட்டில் கௌரவமாகக்  கூறியுள்ளார்.  அதனையே ம.இ.காவின் பொதுப் பேரவையில் சொல்லி இந்தியர்களை ஏமாற்றக் கூடாது.

இந்நாட்டு  இந்தியர்களும் சகல உரிமையும் கொண்ட பிரஜைகள் என்பதனை  அவர் ஏற்றுக் கொண்டால், இந்நாட்டு இந்தியர்களை நேசிப்பது உண்மையானால், அவர் இந்தியர்களுக்கு சேர வேண்டியது இன்னும்  அதிகம் என்பதனை உணர்ந்திருப்பார்.

ஒரு பிரதமர் என்ற ரீதியில் இந்த சமூகத்தில் நிலவும் ஏழ்மை நிலை கண்டு வெட்கப்பட வேண்டும். இந்தியர்களை ஏழ்மையிலிருந்து மீட்க அதிகமாக வழங்க வேண்டும்.

இந்தியர்களிடம்  எனக்கு முன்  இருந்தவர்கள் உங்களுக்கு 50 மில்லியன் மட்டும் தந்தார்கள். நான் அரை பில்லியன் தந்துள்ளோன் என்று  மார்தட்டக் கூடாது.

மலாய்க்காரர்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் போன்று இந்தியர்களுக்கும் வேண்டும்

இந்தியர்களிடம் குடிகொண்டுள்ள ஏழ்மையைப் போக்கப் புதிய யுக்திகள் எதனையும் தேட வேண்டியதில்லை. மாறாக மலாய்க்காரர்கள் ஏழ்மையிலிருந்து விடுபட, அறியாமையிலிருந்து மீள  அவர்களுக்கு என்ன செய்தார்களோ, அதனை நமக்கும் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 55 ஆண்டுகளாக இந்திய சமூகம் இந்நாட்டில் கைவிடப் பட்டுள்ளது என்பதனைப் பிரதமர் ஒப்பு கொள்கிறார். அதனால் பிரதமர் அதைச் செய்கிறார், இதைச் செய்கிறார்  என்று நம்மவர்கள் முழக்கமிட வேண்டாம். குறிப்பாக  ம.இ.கா தலைவர்கள் பிரதமருக்குப் பின்பாட்டு பாடுவதை விடுத்து, இச்சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல் படவேண்டும். அதற்கான 10 திட்டங்கள்:

1. பிரதமர் பத்து மாதங்களுக்கு  முன்  அறிவித்த   புதிய 6 தமிழ்ப்பள்ளிகளின் நிலை   இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. தமிழ்ப்பள்ளிகளின்  தேவை மிகவும் அவசியமானதாக  இருப்பதால்  செரண்டா வாழும் இந்தியர்கள்  தமிழ்ப்பள்ளிக்காகச் சாகும்வரை  உண்ணாவிரதம் இருக்கப் போராட்டம் நடத்தினர் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவசரமான பள்ளிகளில் செரண்டா தமிழ்ப்பள்ளியையும் சேர்த்து 7 பள்ளிகளுக்கும் உடனடியாக மானிய ஒதுக்கீட்டையும், பள்ளிக் கட்டுமானத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது  அனைத்துத் தமிழர்களின்  கடமையாகும்.

தமிழ்ப்பள்ளிகளுக்காகத்  தமிழர்கள் உயிர் தியாகம் செய்ய முன் வருகிறார்கள் என்றால் அது கடுமையான விசயமாகும். அந்நிலை  ஏற்பட்டால் அதன் பின்விளைவு பாரிசான் அரசுக்குக் கடுமையாக  இருக்கும். அதனால் அம்னோவிற்கு விமோசனமே இல்லாமல் போய்விடும்   என்பதனை ம இ கா  தலைவர்கள் பிரதமருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

2. இந்தியர்களின், குறிப்பாக இளைஞர்களின்,  குற்றச் செயல்கள்  அஞ்சும்  அளவுக்கு  உயர்வு கண்டு வருகிறது. இதற்கான இரண்டு முக்கியக் காரணங்கள்  கல்வியும் வேலை வாய்ப்புகளும். ஆக  இந்த இரண்டு துறைகளிலும் இந்தியர்களின் எண்ணிக்கையை உயர்த்த பிரதமர் அவசர  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்று அரசாங்க வேலை வாய்ப்புகளில் அதிகமாக இந்தியர்களுக்கு  வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

3. அடுத்து இடைநிலைப்பள்ளிகளில் கல்வியைக் கைவிட்டுப் பாதியில் ஒதுங்கும்  மாணவர்களின்  எண்ணிக்கையைக்  குறைக்க எல்லா மாநிலங்களிலும் இந்திய இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தங்கும் விடுதிகள்  அமைக்கப்பட வேண்டும்.  அதில் சுமாரான கல்வி தகுதிகளைக் கொண்ட மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுவதுடன் ஏழை மாணவர்களுக்கும்  வாய்ப்பளிக்கப்படவேண்டும்.  இது  கல்வி  அறிவு பெற்ற  இளைஞர்கள்  எண்ணிக்கையை  உயர்த்தும் வேளையில், ஏழ்மை நீங்கவும், குற்றச் செயல்கள் குறையவும் வழி  அமைக்கும்.

4. இந்தியர்களுக்கு  விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்களில் ஈடுபட ஊக்குவிக்கும் வண்ணம் நிலம், பயிற்சி மற்றும் முதலீடுகள்  வழங்கப்பட வேண்டும்.  முன்னாள்  அமைச்சர் ஷாரிசாட் மாட்டு பண்ணைக்கு வழங்கிய தொகையை  இந்திய கால் நடை உற்பத்தியாளர்களுக்கு  வழங்கினாலே எவ்வளவோ அன்னியச் செலவாணியை மிச்சப்படுத்தலாம்.

5. சிறு குத்தகைகளில் இந்தியர்களும்  ஈடுபட எப் (F)  லைசன் போன்ற குத்தகைகளைப்  பெற இந்தியர்களுக்கும் வாய்ப்பும், பயிற்சியும், ஊக்குவிப்பும் வழங்க வேண்டும்.

6. அதிகமான  இந்தியர்கள் போக்குவரத்து துறைகளில்  ஈடுபட்டுள்ளதால்  அவர்களுக்கு அதற்கான  உரிமம்  இலகுவாகக்  கிடைப்பதை  உறுதி படுத்த வேண்டும். குறிப்பாக லோரி வர்த்தக ஏ (A) பெர்மிட் மற்றும் பஸ் போக்குவரத்து துறைகளிலும் கப்பல்  மற்றும் துறைமுகச்  சரக்கு பட்டுவாடா துறை முகவர்களுக்கான லைசன்ஸ் மீண்டும் வழங்கப்பட வேண்டும். அத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு  ஏற்ப பயிற்சிகள் மற்றும் தொழில்   வாய்ப்புகளும் வழங்க வேண்டும்.

7. மற்றத் தொழில்களிலும், குறிப்பாகச் சிறு தொழிற்துறை உற்பத்திதுறைகளிலும்,  விவசாயத்துறைகளிலும் இந்தியர்களை ஈடுபடுத்த அதற்கான தனி ஆய்வு மற்றும் வர்த்தகக் கழகங்கள்  அமைக்கப்பட வேண்டும். அதற்கான நடைமுறை கொள்கை தாராளமயப்படுத்துதல் வேண்டும்.

8. மற்றத்தொழில் துறைகளிலும் இந்தியர்கள் ஈடுபட அரசாங்க மற்றும் தொழில்துறை     கொள்கைகளைத் தாராளமயப்படுத்துதல் வேண்டும்.

9. இத்தொழில்களில் இந்தியர்கள்  தங்குதடையின்றி ஈடுபட அவர்களுக்கு  வங்கி மற்றும்  இன்சூரன்ஸ்  நிறுவனங்கள்  அவசியம்.  அதற்கான உரிமங்களும் வழங்கப்பட வேண்டும்.

10. இவை அனைத்தையும் சாத்தியமான முறையில் செயல் படுத்த  இந்திய சமூகத்திற்கு  ஆண்டுக்கு 200 கோடிகள் வீதம்  அடுத்த  ஐந்து  ஆண்டுகளுக்காவது சுழல் நிதி அடிப்படையில் வழங்க வேண்டும்.

ஆட்டிறைச்சியும் நம்பிக்கையும் வேண்டாம்

இந்தத் தொகை மிக அவசியம், நாட்டின் மொத்தப் பட்ஜெட்டில்  இது ஒரு விழுக்காடு கூட இல்லை.  இந்த நாட்டின் மேம்பாட்டுக்காக இரவுபகலெனப் பார்க்காது  உழைத்த இனத்துக்கு இதுகூடத்  தரக்கூடாதா என்பதே நமது கேள்வி.

இவை அனைத்தும் பூமிபுத்ரா மக்களை  ஏழ்மையிலிருந்து மீட்க  அரசாங்கம் பின்பற்றிய வழி முறைகள்(Affirmative action) தான். இன்று  அவர்களை விட மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் இந்தியர்களும்  இந்நாட்டு பிரஜைகள்தான். அவர்களும் வாழ வேண்டும்.  இச்சமூகத்தின் நிலை மேம்பாடு அடைவதற்கு அனைவரும் பரிவு காட்ட வேண்டும் என்று ம.இ.கா  வற்புறுத்த வேண்டும்.

ஆக, இந்தியர்களுக்கு  இந்த வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று எந்த அரசாக இருந்தாலும்  அதனை வற்புறுத்த  நாங்கள் சித்தமாகவுள்ளோம்.

ஆகவே, இச்சமூகம் மீட்சி பெற வேண்டும்  என்ற சிந்தனை  ம.இ.காவிடம்  இருக்குமாயின்,  பிரதமரை  இதற்கு வற்புறுத்த வேண்டும். “நம்பிக்கை”  என்று நம்மவர்களை  ஏமாளிகளாக்கும் போக்கைக் கைவிட வேண்டும்.

இச்சமூகத்தின்  முன்னேற்றத்திற்காக எங்களின் பொருளாதார திட்டங்களை  எவருடனும் பரிமாறிக் கொள்ள சித்தமாக இருக்கிறோம்.
ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டிறைச்சி சாப்பிடத்தான்  இந்தியர்கள் தகுதியானவர்கள்.  ஐந்து கிலோ அரிசிக்கும், இரண்டு கிலோ சீனிக்கும் ஓட்டு போடும் ஏமாளிகளாக அவர்கள் வாழ்ந்த காலம் மலையேறி விட்டது.

இனிமேலாவது இந்தியர்கள் காரியத்தில் குறியாக இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.