உங்கள் கருத்து: நாடற்றவராக ஓர் இந்தியர் இருந்தாலும் அது கேள்விக்குரியதுதான்

“சுதந்திரம்பெற்று 50 ஆண்டுகள் ஆன பிறகும் பிஎன் அரசு நாடற்றவர் தகுதிநிலை பற்றி இன்னமும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்று கூறுவதைக் கேட்க அதிர்ச்சியாக உள்ளது.”

பிரதமர்: நாடற்றவர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்படுகிறது

லூயிஸ்: நாடற்றவர்களாக உள்ள இந்தியர் எண்ணிக்கை 300ஆயிரமோ ஒன்பதாயிரமோ பிரச்னை இல்லை. முதற்கண் நாடற்ற இந்தியர் என்று ஒருவர்கூட இருக்கக் கூடாது.

இந்தியர்களும் குடியேறிவந்த மற்றவர்களுடன் சேர்ந்து மலேசியாவை மேம்படுத்த கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

மற்றவர்கள் செய்ய விரும்பாத வேலைகளை, ரப்பர் மரம் வெட்டுதல், கொளுத்தும் வெய்யிலில் சாலைகளை அமைத்தல் போன்றவற்றைச் செய்தவர்கள் இந்தியர்கள்.

அவர்களுக்குத்தான் சுதந்திரம் கிடைத்தவுடன் முதலில் குடியுரிமை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சுதந்திரம்பெற்று 50 ஆண்டுகள் ஆன பிறகும் பிஎன் அரசு நாடற்றவர் தகுதிநிலை பற்றி இன்னமும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்று கூறுவதைக் கேட்க அதிர்ச்சியாக உள்ளது. இதை எண்ணி பிஎன் வெட்கப்பட வேண்டும்.

பூமிஅஸ்லி: எதிர்த்தரப்பினர் கொடுக்கும் புள்ளிவிவரங்கள் சர்ச்சைக்குரியவையாகவே இருக்கட்டும். புள்ளிவிவரங்கள் நூற்றுக்கு நூறு உண்மையாக இருப்பதில்லை. ஆனால், இப்பிரச்னை இருப்பது உண்மைதானே? அதைப் பிரதமரால் மறுக்க முடியாதே.

இந்தியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள், சிறைகளில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், சாலையோரங்களில் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள், அவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்படுவதில்லை என்பதுதானே உண்மை.

மஇகா மட்டும் அது செய்ய வேண்டியதைச் சரியாக செய்திருந்தால் இந்த விவகாரமே முடிந்து போயிருக்கும்.

தேர்தலில் தோல்வி ஏற்பட்டும் அபாயம் இருப்பதால் மைகார்ட் தருகிறேன், குடியுரிமை தருகிறேன் என்று சொல்வது வேளைக்கு ஆகாது. சொல்வதைச் செய்யுங்கள், பிறகு பார்க்கலாம்.

டூட்: ஐயா, கேள்வி இதுதான். நாடற்றவராக இருக்கும் இந்தியர் ஒருவர்தான் என்றாலும், அவர் ஏன் நாடற்றவராக இருக்க வேண்டும்?

பெயரிலி  #01428088: அட, 9,000 என்ற எண்ணிக்கை சரியானது என்றே வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு ஏன் அரசு உடனடியாகக் குடியுரிமை வழங்கக்கூடாது? ஆயிரக்கணக்கான இந்தோனிசியர்களுக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இந்தியர்களுக்குக் கொடுக்கக் கூடாதா?

டாக்டர் சுரேஷ்:  நஜிப், என்ஆர்டி பணியாளர்களைத் திரட்டுங்கள். தனிப் பணிப்படை ஒன்றை அமையுங்கள். நாடற்றவர்கள் நாட்டின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் தேடிப் பிடியுங்கள்.

ஈராண்டுகளுக்கு முன்பு, இந்திய மலேசியப் பெண் ஒருவர் பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அவர் நன்கு மலாய் பேசினார். தாம் பேராக்கைச் சேர்ந்தவர் என்று கூறி தன் தாயாரின் முகவரியைக் கூட கொடுத்தார்.ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரை ஸ்ரீலங்காவுக்கு நாடு கடத்த முயன்றனர்.

அவர், தடுத்து வைக்கப்பட்ட நிலையிலேயே ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். அதன்பின் ஒரு என்ஜிஓ, அவர் பயின்ற முன்னாள் பள்ளியில் அவரைப் பற்றிய விவரங்களை எல்லாம் திரட்டிக் கொண்டு வந்து கொடுத்து அவரை விடுவித்தது. சில தொலைபேசி அழைப்புகள் மூலமாகவே அத்தனை வேலையும் செய்து முடிக்கப்பட்டது.இது, அரசாங்க அதிகாரிகளின் வேலை. என்ஜிஓ-க்களோ இண்ட்ராபோ இதற்குத் தேவையில்லை.

ஸ்டார்: எத்தனை பேர் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு பிரச்னை அல்ல. அவ்விவகாரத்தை நேர்மையாகவும் நியாகமாகவும் கவனிக்க வேண்டும் என்ற விருப்பம் உளப்பூர்வமாக இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

லீசியோவீ: மலேசியாவில் பிறந்து வளர்ந்த பலர் பல ஆண்டுகளாக விண்ணப்பம் செய்து விட்டு குடிநுழைவு அலுவலகங்களுக்குப் போய் வந்துகொண்டிருப்பதை நான் அறிவேன். எந்தப் பலனும் கிடைப்பதில்லை.

ஆனால், தேர்தல் வந்து விட்டால் போதும். என்ன மாய மந்திரமோ, ஒரு சிலருக்குக் குடியுரிமை கிடைக்கும். அது பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக பிரமாதப்படுத்தப்படும். ஆனால், அப்படிக் குடியுரிமை பெற்றவர்கள் 60 வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள் அல்லது படுத்த படுக்கையாக இன்று நாளை என்று நாள்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள், அந்த விவரம் தெரிவிக்கப்படுவதில்லை.

பெர்ட் டான்: நஜிப் அவர்களே, நாடற்றவர்களின் எண்ணிக்கை எதுவாக இருந்தால் என்ன? நீங்கள் அப்பிரச்னை இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படியானால், அதற்குத் தீர்வுகாண ஒரு காலவரையை நிர்ணயிக்க வேண்டியதுதானே?  அதற்குத் தீர்வுகாணும் விருப்பம் உண்மையிலே இருக்குமானால் அதைத்தானே செய்ய வேண்டும்.

அன்வார் இப்ராகிம், புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் ஒரு மாதத்தில் அப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று கூறியிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய விவகாரங்களைத் தவிர்ப்பதும் மழுப்புவதும்தான் உங்கள் வழக்கம் என்பதைக் கவனித்து வந்திருக்கிறோம். இங்கும் அப்படித்தான் பிரச்னையை விட்டுவிட்டு நாடற்றவர் எண்ணிக்கை பற்றிப் பேசினீர்கள்.

இது, இந்தியர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் அம்னோவுக்கு இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது.

 

 

TAGS: