‘நாடற்ற இந்தியர் எண்ணிக்கை குறித்து பிரதமர் பொய் சொல்கிறார்’

மலேசியாவில் நாடற்றவர்களாக உள்ள இந்தியர் எண்ணிக்கை 9,000தான் என்று பிரதமர் கூறியிருப்பதைச் சாடுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன்.

“பிரதமரின் அறிவிப்பில் உண்மையில்லை. அது நாடற்றவர்களாக உள்ள இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும் அருவறுக்கத்தக்க முயற்சி; அந்த எண்ணிக்கை 9,000 என்பது அடிப்படையற்றது, அறிவுக்குப் பொருந்தாதது”, என்று சுரேந்திரன் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

நேற்று மஇகா பேரவையில், பேசிய நஜிப் (வலம்) நாடற்ற இந்தியர் எண்ணிக்கை 300,000 என்று பக்காத்தான் கூறியிருப்பதை மறுத்து அந்த எண்ணிக்கை 9,000தான் என்றார்.

மைடாப்டார் இயக்கம் மேற்கொள்ளப்பட்டபோது தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) முகப்புகளில்  பதிவுசெய்ய வந்தவர் எண்ணிக்கையை வைத்து நஜிப் அந்த மதிப்பீட்டைச் செய்திருக்கிறார் என்று கூறிய சுரேந்திரன், அந்த இயக்கம் சில வாரங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது என்பதால் “அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை” என்றார்.

நாடற்ற இந்தியர் பிரச்னை என்னும் “மிகப் பெரிய அநீதிக்கு முடிவுகட்ட” எந்தவொரு முயற்சியும் எடுக்காத பிரதமருக்கு அவர் கண்டனம் தெரிவித்துக்கொண்டார்.

அதனால் பாதிக்கப்பட்டோர் பள்ளிக்கூடம் செல்ல முடிவதில்லை, அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை, அடிப்படை வசதிகளும் கிட்டுவதில்லை என்றார்.

இவ்வாண்டு முற்பகுதியில் பி.ரெஷினாவுக்கு நேர்ந்ததையும் அந்த பிகேஆர் உதவித் தலைவர்(வலம்) சுட்டிக்காண்பித்தார். மலேசியாவில் பிறந்திருந்தாலும் மைகார்ட் வைத்திருக்கவில்லை என்பதால் அவர் எஸ்பிஎம் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

“நாடற்றிருக்கும் இந்தியர்களுக்கு நீலநிற அடையாள அட்டைகள் கொடுக்க மறுப்பதன்வழி நஜிப்பும் அரசாங்கமும் அரசமைப்பை மீறியிருக்கிறார்கள்.

“நீண்ட காலமாக தொல்லைகளை அனுபவித்து வரும் நாடற்றவர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருமாறு நஜிப்பையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறோம்”, என்று சுரேந்திரன் கூறினார்.

சுவா: இந்தியர்கள் இனியும் பிஎன்னை நம்பக்கூடாது

இதனிடையே, நீண்ட காலத்துக்குமுன்பே இப்பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட இன்னொரு பிகேஆர் உதவித் தலைவரான சுவா ஜூய் மெங், “மத்திய அரசை மாற்ற (இந்தியர்களுக்கு) இந்த ஒரு காரணமே போதும்”, என்றார்.

“நீண்ட காலத்துக்கு முன்பே இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். எனவே, மலேசியாவாழ் இந்தியர்கள் இனியும் அம்னோ வழிநடத்தும் பாரிசான் நேசனலை நம்பி இருக்க முடியாது”, என்று இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து, பகாசா மலேசியாவையும் நன்கு பேசத் தெரிந்த நாடற்ற இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஏன் என்று பிஎன் அரசில் நீண்டகாலம் சுகாதார அமைச்சராக பணியாற்றியவரான சுவா வினவினார்.

“அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது ஏன்? அவர்களின் கோப்புகள் அலமாரியில் தூசு பிடித்துப்போய் கிடப்பது ஏன்?

“சாபாவில் இந்தோனேசியாவையும் பிலிப்பீன்சையும் சேர்ந்த 600,000 பேருக்குக் குடியுரிமையும் பூமிபுத்ரா தகுதியும் கொடுக்கப்பட்டது ஏன்”, என்று வினவிய அவர், பிலிப்பினோ மலேசியர் பலருக்கு தேசிய மொழி பேசவும் தெரியாது என்று குறிப்பிட்டார்.

பக்காத்தான் வென்று ஆட்சிக்கு வந்தால் நாடற்றவர்களாக உள்ள அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்  வாக்குறுதி வழங்கியிருப்பதால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெறுவதை இந்தியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுவா (இடம்) வலியுறுத்தினார்.

நாடற்றவர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுப்பதற்காக இம்மாதம் புத்ரா ஜெயாவில் என்ஆர்டி தலைமையகத்தில் பேரணி நடத்தப்போவதாக பிகேஆர் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

டிசம்பர் 5-இல் நடத்தப்படவிருந்த அப்பேரணி, ஆதரவு அளவுக்கு அதிகமாகப் பெருகி வருவதால் டிசம்பர் 12-க்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

TAGS: