பினாங்கு மாநிலத்தில் முஸ்லிம் விவகாரங்களுக்குக் கூடுதல் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதால் அது இஸ்லாமியமயத்தை நோக்கிச் செல்லக் கூடும் என கடந்த வாரம் அறிக்கை விடுத்த பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் தொடர்ந்து கண்டிக்கப்பட்டு வருகிறார்.
தெங்-கின் ‘இனவாதி, துரோகி, மலாய் எதிர்ப்பு, இஸ்லாம் எதிர்ப்புப் போக்கு பாரிசான் நேசனலுடைய “தீய, குறுகிய மனப் போக்கை” தெளிவாகக் காட்டுகின்றது என இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் அபுல் காசிம் கூறினார்.
“அம்னோ தொடர்ந்து மௌனமாக இருப்பதும் நிலமையை மோசமாக்கியுள்ளது. சமயத்தை பாதுகாப்பதாகக் கூறிக் கொள்ளும் அம்னோவின் கபட நாடகத்தையும் அது உணர்த்தியுள்ளது. இங்கு அம்னோ, தெங் சொன்னதை அங்கீகரிப்பதுடன் அவருடன் ஒத்துழைப்பதாகவும் தோன்றுகிறது,” என அப்துல் மாலிக் சொன்னார்.
“அதே அம்னோ சமூகத்தின் மனதில் விஷத்தைக் கலக்கும் பொருட்டு பினாங்கு அரசாங்கம் மலாய் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டியது,” என அவர் விடுத்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
டிசம்பர் 6ம் தேதி மசீச ஏற்பாடு செய்த விருந்து ஒன்றில் பேசிய தெங், இஸ்லாமிய விவகாரங்களுக்கான மாநில அரசாங்க ஒதுக்கீடுகள் 300 விழுக்காடு கூடியுள்ளது என்றும் ஆனால் சீன நகர மண்டப அமைப்புக்கு அதிகம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
மாநிலச் சட்டமன்றத்தில் 19 இடங்களை வைத்துள்ள டிஏபி, 9 இடங்களை வைத்துள்ள பிகேஆர் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் ஒரே ஒரு இடத்தை மட்டும் பெற்றுள்ள பாஸ் கட்சியைக் கண்டு முதலமைச்சர் ‘அஞ்சுவதாக’ கூட முன்னாள் ஆட்சி மன்ற உறுப்பினருமான தெங் கேலி செய்தார்.
‘தெங், அதனை மலாய்க்காரர்களிடம் சொல்லுங்கள்’
என்றாலும் மாநில அரசாங்கம் மீது அம்னோ தெரிவித்துள்ள குறைபாடுகளை தெங் அறிக்கை மறுத்து விட்டதாக அப்துல் மாலிக் சொன்னார்.
கெரக்கான் தலைமைச் செயலாளருமான தெங் விடுத்த அறிக்கை, பினாங்கு மாநில அரசாங்கம் இன, சமய, அரசியல் பிணைப்பு வேறுபாடின்றி அனைவருக்கும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வதை மெய்பித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அத்துடன் பினாங்கு மாநிலத்தை 50 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்துள்ள பிஎன் பல்வேறு துறைகளில் மலாய், முஸ்லிம் உரிமைகளை மறுத்துள்ளதையும் தெங் அறிக்கை உறுதி செய்கிறது,” என பத்து மாவ்ங் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் மாலிக் சொன்னார்.
“கெரக்கான், மசீச ஆதரவாளர்கள் முன்னிலையில் தெங் தெரிவித்துள்ள அந்த விஷயம், தமது கட்சித் தலைவர் கோ சூ கூன் தலைமையில் மாநிலம் இருந்த போது பக்காத்தான் ராக்யாட்டில் நாங்கள் செய்த அளவுக்கு ஒதுக்கீடுகளை அங்கீகரித்தது இல்லை என்பதையும் உணர்த்தியுள்ளது.”
சமூகம், சமயம் ஆகியவற்றின் மேம்பாட்டை தடுக்க முயலும் தெங் போன்ற தலைவர்களுடன் பிஎன் ஆட்சி புரியுமானால் சமூகம் தொடர்ந்து ஒரங்கட்டப்படும் என்றும் அப்துல் மாலிக் குறிப்பிட்டார்.
தெங் தாம் சொன்னதை மலாய் சமூகத்திடம் திரும்பச் சொல்ல வேண்டும் எனவும் அவர் தெங்-கிற்குச் சவால் விடுத்தார்.
தெங் தாம் சொன்ன வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவரிடம் கோருமாறு மாநில அம்னோ தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மானுக்கும் அப்துல் மாலிக் சவால் விடுத்தார்.
அம்னோ ஆதரவுத் தலைவர்கள் வழி நடத்தும் பல்வேறு அரசு சாரா மலாய் அமைப்புக்களும் கட்சிக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவும் தெங்-கின் கருத்துக்களைக் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.