மீண்டும் மீண்டும் இந்தியர்களை ஏமாற்ற முடியாது, வேதமூர்த்தி காட்டம்

இந்தியர்கள் தூங்கியிருந்த காலம் கடந்து விட்டது அவர்கள் விழித்துவிட்டார்கள் அவர்களை இனிமேலும் இந்த பாரிசான் அரசாங்கம் இனிமேலும் ஏமாற்ற முடியாது என ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார். நேற்று டத்தாரன் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற அனைத்துலக மனித உரிமை நாள் கொண்டாட்ட நிகழ்வின்போதே அவர் இதனை தெரிவித்தார். ( VIDEO | 09:15 mins )

பரிவுதான் உரிமை என்ற தோற்றத்தை காட்டி காட்டி 55 ஆண்டுகளாக பாரிசான் அரசாங்கம் மலேசிய இந்தியர்களை அளவுக்கு மீறி ஏமாற்றிவிட்டதாக வேதமூர்த்தி குற்றம்சாட்டினார்.

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்ட 30 கொள்கைகள் 1948-ஆம் ஆண்டுக் காலப்பகுயில் மலாயாவில் அமுலில் இருந்ததாக கூறிய வேதமூர்த்தி, 1957-ல் நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் அக்கொள்கைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்றார்.

எனினும், தற்போது மலேசியாவில் அமுலில் இருக்கும் சில அனைத்துலக மனித உரிமைக் கொள்கைகள் அரையுங் குறையுமாகதான் உள்ளது. சமவுரிமை, மதவுரிமை, பேச்சுரிமை, பொருளாதார உரிமை, மக்களுடைய உரிமை என அனைத்தும் இங்கு அரையுங் குறையுமாக உள்ளதாக வேதமூர்த்தி சாடினார்.

ஐ.நா மன்றத்தில் மலேசியாவால் பேசப்படும் அனைத்துலக மனித உரிமைக் கொள்கைகள் சுதந்திரத்தின் பின்னர் முறையாக இந்நாட்டில் அமுல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய வேதமூர்த்தி, அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின்போது நிறைவேற்றப்பட்ட 30 கொள்கைகளில் சுமார் 25 கொள்கைகள் இன்னும் மலேசியாவில் நிறைவேற்றப்படவில்லை என கூறினார்.

அனைத்துலக மனித உரிமை நாளை முன்னிட்டு நேற்று இரவு 7.30 மணிக்கு டத்தாரன் மெர்டேக்கா சதுக்கத்தில் ஹிண்ட்ராப் ஏற்பாடு செய்தியிருந்த இந்நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மனித உரிமைச் ஆர்வலர்களுடன், ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி, ஹிண்ட்ராப் ஆலோசகர் கணேசன், ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் சம்புலிங்கம் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்ட 30 கொள்கைகள் குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். “அடிமைத்தனம் வேண்டாம்”, “விசாரணைக்கான உரிமை”, பாரபட்சம் காட்ட வேண்டாம்” எனக் கூறும் வாசகங்கள் அதில் காணப்பட்டன.

ஒரு மணி நேரம் நீடித்த அந்த நிகழ்வில் பேசிய ஹிண்ட்ராப் தலைவர்கள் நியாயமான சமூகத்தை உருவாக்க தவறி விட்டதாக அரசாங்கத்தைக் குறை கூறினர்.

அந்த இடத்தில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தைச் சேர்ந்த 25 அமலாக்க அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் காணப்பட்டனர். ஆனால் கூட்டத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இரவு 9 மணிக்கு கூட்டம் கலைந்தது. அதற்கு முன்பு ‘தோல்வி நிலையென நினைத்தால்’ எனத் தொடங்கும் ஹிண்ட்ராப் கீதத்தை கூட்டத்தினர் பாடினார்கள்.

TAGS: