ஏஇஎஸ் போராட்டத்தில் பாஸ் கட்சி சட்ட பலவீனத்தைக் கண்டு பிடித்துள்ளது

ஏஇஎஸ் என்ற தானியங்கி அமலாக்க முறையின் கீழ் கொடுக்கப்பட்ட குற்றப்பதிவுகள் சட்டப்படி செல்லாதவை. அத்தகைய குற்றப்பதிவுகளை வெளியிடும் அதிகாரமோ அந்த முறையின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவோ சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு இல்லை.

இவ்வாறு அஞ்சல் வழி அனுப்பப்படும் குற்றப்பதிவுகளுக்கு எதிராகப் போராடும் பாஸ் கட்சியின் காசே ( Kase ) அமைப்பு கூறுகிறது.

அந்தக் குற்றங்களை புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றவர்களை நீதிமன்றத்தில் சாலைப் போக்குவரத்துத் துறை நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றம் சாட்டுவது 1984ம் ஆண்டுக்கான சாலைப் போக்குவரத்துச் சட்டத்தை மீறுவதாகும். அந்தச் சட்டம், அரசாங்க வழக்குரைஞர் அல்லது அவரது அதிகாரத்தில் செயல்படுகின்ற ஒருவரோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட முடியும் எனச் சொல்கிறது.

“நீதிமன்றத்தில் எந்தக் குற்றச்சாட்டும் வாசிக்கப்படுவதற்கு முன்னரே நாங்கள் ஆட்சேபனை செய்வோம், அந்தச் சட்டத்தின் கீழ் அந்தக் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வந்தது சாலைப் போக்குவரத்து அதிகாரிகள் என்றால் அவற்றைச் சுமத்த முடியாது. காரணம் அதனைச் செய்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை,” எனக் காசே ஆலோசகர் சுல்ஹாஸ்மி ஷரிப் கோலாலம்பூரில் நேற்று பாஸ் தலைமையகத்தில் கூறினார்.

“அரசாங்க வழக்குரைஞர் அல்லது குறைந்தது அவரது உதவியாளர் சாலைப் போக்குவரத்துத் துறையைப் பிரதிநிதித்து நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்.”

“சாலைப் போக்குவரத்துத் துறை அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்த விருபினால் அரசாங்க வழக்குரைஞருடைய ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். அந்த ஒப்புதல் இல்லை என்றால் அது நடவடிக்கை எடுக்க முடியாது,” எனக் குறிப்பிட்ட சுல்ஹாஸ்மி அந்த இணக்கமும் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

நேற்று காலை செப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அத்தகைய குற்றச்சாட்டு ஒன்று கொண்டு வரப்பட்ட போது தாம் ஆட்சேபித்த பின்னர் சாலைப் போக்குவரத்து அதிகாரிக்குப் பதில் அரசாங்க வழக்குரைஞர் வரும் வரை அத்தகையை வழக்குகள் அனைத்தையும் நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டதாகவும் சுல்ஹாஸ்மி தெரிவித்தார்.

நீதிமன்ற நடைமுறை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது

என்றாலும் புத்ராஜெயா, காஜாங், கோலாலம்பூர் நீதிமன்றங்களில் அதே மாதிரி நடைபெறவில்லை என அவர் வருத்தமுடன் கூறினார்.

பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களை ஒப்புக் கொண்டவர்களுக்கு குற்றப்பதிவுகளை அவை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

“அது நீதிமன்ற நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். குற்றம் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாததால் அது நீதிமன்ற அவமதிப்பாகவும் கருத முடியும்.”

“அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடக்கத்திலிருந்தே சட்டப்படி செல்லாதவை என்பதால் குற்றப்பதிவுகளை நீதிமன்றங்கள் மீட்டுக் கொள்ள வேண்டும்,” என சுல்ஹாஸ்மி சொன்னார்.

தாம் நீதிமன்ற நடைமுறை பற்றி மட்டுமே கேள்வி எழுப்புவதாக வலியுறுத்திய அவர்,” அந்த ஏஇஎஸ் குற்றச்சாட்டுக்களை சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தொடரும் வரை நாங்கள் ஆட்சேபிப்போம்.”

ஏஇஎஸ் குற்றப்பதிவுகளை பெற்ற ஐவரை புத்ராஜெயாவிலும் எண்மரை செப்பாங்கிலும் இருவரை காஜாங்கிலும் மூவரைக் கோலாலம்பூரிலும் நேற்று காசே வழியாக பாஸ் பிரதிநிதித்தது.

அந்த வழக்குகளில் ஆஜராவதற்கு அரசாங்க வழக்குரைஞருடைய ஒப்புதலை சம்பந்தப்பட்ட சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பெற முடியாமல் போனதால் அந்த வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

TAGS: