கிளானா ஜெயாவுக்குக் கூடுதல் போலீஸ் தேவை

கிளானா ஜெயாவில் உள்ள சுமார் 200,000 மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்குச் சேவையாற்றவும் 56 போலீசார் இருப்பது போதாது எனக் குறைகூறப்பட்டுள்ளது.

மக்கள்தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை இல்லாததால் தேசா மெந்தாரி, பிஜேஸ் 8,9 போன்ற பகுதிகளிலும் தம் தொகுதியிலும் கடும் குற்றங்கள் “அபாயமளிக்கும் வகையில் பெருகி வருகின்றன” என்று கிளானா ஜெயா எம்பி லோ குவோ-பர்ன் நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

தேசிய அளவில் 250 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற விகிதம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று கூறிய அவர், என்றாலும் தம் தொகுதியில் அப்படி இல்லை என்றார்.

போலீசார் குற்றச்செயல்களை ஒடுக்கும் வியூகங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்று கூறிய லோ, இவ்வாண்டில் மட்டும் பிஜேஎஸ் 8-இல் உள்ள தம் அலுவலகத்தில் திருடர்கள் 10 தடவை உடைத்துக்கொண்டு உட்புகுந்திருக்கிறார்கள் என்றார்.

ஒரு குடையை நிறுத்திவைத்து அதன்கீழ் நடமாடும் போலீஸ் சாவடிகளை அமைத்துக்கொண்டு காவல்பணி மேற்கொள்ளும் ஒப்ஸ் பாயோங் முறை குற்றத்தை எதிர்ப்பதில் அவ்வளவாக பயனளிக்கவில்லை.

ஏனென்றால், “குற்றச்செயல்கள் நிகழ்ந்த பின்னர்தான் அப்படிப்பட்ட சாவடிகள் அமைக்கப்படுகின்றன என்பதுடன் சந்தேகப் பேர்வழிகளை விரட்டிப் பிடிக்க அங்குள்ள போலீசாரிடம் வாகன வசதிகளும் இருப்பதில்லை”.

2010-இல் சிலாங்கூர் போலீஸ் இந்த ‘ஒப்ஸ் பாயோங்’ முறையை அறிமுகப்படுத்தியது. அடிக்கடி குற்றம் நிகழும் ஓர் இடத்தில் போலீசார் நிறுத்தி வைக்கப்படுவார்கள். நான்கு மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் வேறோர் இடத்துக்கு மாறிச் செல்வார்கள்.

குற்றச்செயல்களை ஒடுக்க‘ஒப்ஸ் பாயோங்’குடன் போலீஸ் நிலையங்களும் போலீஸ் காவல்சுற்றுத் தளங்களையும் அமைக்கலாம் என்று லோ அறிவுறுத்தினார்.

TAGS: