இந்த நாட்டில் இயங்கும் கட்டுப்பாட்டு அமைப்புக்கள் நிர்ணயித்துள்ள எல்லா விதிகளையும் பூர்த்தி செய்யப் போவதாக லைனாஸ் அறிவித்துள்ளது.
குவாந்தான் கெபெங்கில் உள்ள அதன் அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவது தொடர்பில் வெளியிடப்பட்ட “துல்லிதமில்லாத ஊடகத் தகவல்களை” தொடர்ந்து இவ்வாறு அறிவிப்பதாக லைனாஸ் தெரிவித்தது.
WLP கழிவுகள் ( இயற்கையாக உருவாகும் குறைந்த சக்தியைக் கொண்ட அணுக்கதிரியக்க பொருட்கள் ) வர்த்தக ரீதியில் பாதுகாப்பான ‘செயற்கை கூட்டுப் பொருட்களாக’ மாற்றப்படும் என அது மேலும் தெரிவித்தது.
இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருள் பொது மக்களுக்குப் பாதுகாப்பானது என்பதை பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் விளக்குவதற்காக குவாந்தானில் டிசம்பர் 7ம் தேதி விளக்க நிகழ்வு ஒன்றை நடத்தியதாகவும் லைனாஸ் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.
அனைத்துலக, உள்நாட்டு தரங்கள், விதிமுறைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப மற்ற நாடுகளுக்கு அந்த செயற்கைக் கூட்டுப் பொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் மாஷால் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியது.
அந்த செயற்கைக் கூட்டுப் பொருள் கட்டுமான பொறியியலில் பயன்படுத்தப்படுகின்றது.
WLP கழிவுகளை மாற்றுவதற்கான தொழில் கூடம் கெபெங்-கில் கட்டப்பட்டுள்ளதாகவும் அது இயங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் லைனாஸ் கூறியது.
“மலேசிய மக்களையும் அரசாங்கத்தையும் லைனாஸ் ஏமாற்றுவதாக வேண்டுமென்றே சித்தரித்துள்ள தகவல்களை அடையாளம் காண்பதற்காக லைனாஸ் எல்லா ஊடகச் செய்திகளையும் ஆய்வு செய்து வருகின்றது.”
-பெர்னாமா