மலேசிய இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு முன்மொழிந்துள்ள ஐந்து ஆண்டு பெருந்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் உடன்பாட்டில் அடுத்த மாதத் தொடக்கத்தில் பக்காத்தான் கையெழுத்திடும்.
“கொள்கை அளவில் அவை (பக்காத்தான் கட்சிகள்), (நமது பெருந்திட்டத்தை) ஒப்புக் கொண்டு ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன. ஆனால் அந்த ஆவணத்தில் அவை கையெழுத்திட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி சொன்னார்.
“அவர்கள் ஜனவரி முதல் வாரத்தில் அதில் கையெழுத்திட ஒப்புக் கொண்டுள்ளனர்,” என அவர் மலேசியாகினியிடம் நேற்றிரவு கூறினார்.
அவர் கோலாலம்பூர் டாத்தாரான் மெர்தேக்காவில் ஹிண்ட்ராப்பின் உலக மனித உரிமை தினத்தை தொடக்கி வைத்த பின்னர் மலேசியாகினியிடம் பேசினார்.
அதில் உள்ள சில சிறிய பிரச்னைகளை தீர்த்த பின்னர் அந்த பெருந்திட்டத்தில் பக்காத்தான் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கையெழுத்திடுவார் என அவர் தெரிவித்தார்.
அது நடந்ததும் அடுத்த மாதம் கோலாலம்பூரில் பக்காத்தான் ஆதரவுடன் நிகழும் ‘மக்கள் எழுச்சிப் பேரணிக்கு’ பங்கேற்பாளர்களைத் திரட்டுவது பற்றி ஹிண்ட்ராப் பரிசீலிக்கும் என்றும் வேதமூர்த்தி தெரிவித்தார்.
இந்திய சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட அந்தப் பெருந்திட்டத்தை அங்கீகரிக்கும் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கப் போவதாக ஹிண்ட்ராப் ஏற்கனவே அறிவித்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என ஹிண்ட்ராப் விரும்பும் மலேசிய இந்தியர்களுடைய ஆறு பெரிய பிரச்னைகளை அந்தப் பெருந்திட்டம் கொண்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் ‘கட்டத்தை’ ஹிண்ட்ராப் எட்டவில்லை என்றும் வேதமூர்த்தி சொன்னார்.