கடந்த அக்டோபர் மாதம் கோத்தா பாரு நகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாத நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஷாரியா சட்டங்கள் தொடர்புடையது அல்ல.
அந்தத் தகவலை பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இன்று வெளியிட்டார்.
1990ம் ஆண்டு கிளந்தான் ஆட்சியை பாஸ் எடுத்துக் கொண்டதிலிருந்து இஸ்லாமியச் சட்டங்களுக்கு எந்த ஒரு முஸ்லிம் அல்லாதாரும் உட்படுத்தப்படவில்லை என அவர் சொன்னார்.
ஆனால் முஸ்லிம் அல்லாதார் இஸ்லாமியச் சட்டங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்னும் தோற்றத்தை மசீச முயன்று வருவதாகவும் முஸ்தாபா குற்றம் சாட்டினார்.
“மசீச அந்த விஷயத்தை பரபரப்பாக்கி வருகின்றது. தி ஸ்டார் நாளேடு மசீச-வுக்குச் சொந்தமானது என்பது எங்களுக்குத் தெரியும். சீன சமூகத்தின் ஆதரவைத் திரட்டுவதற்கு மசீச வகுத்துள்ள திட்டம் அது என்றும் அவர் சொன்னார்.
முஸ்தாபா பாஸ் தலைமையகத்தில் நிருபர்களைச் சந்தித்தார்.
“பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவே அந்த நான்கு தனிநபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கல்வாத் குற்றத்துக்கு அல்ல.”
திருமணம் செய்து கொள்ளாத ஆண்களும் பெண்களும் அணுக்கமாக இருப்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் கல்வாத் குற்றமாகும்.
நேற்று ‘கல்வாத் விவகாரம் சூடு பிடிக்கிறது ( ‘Khalwat issue heats up ) என்னும் தலைப்பில் தி ஸ்டார் நாளேடு முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. “அநாகரீகமான நடத்தைக்காக நான்கு தனிநபர்களுக்கு குற்றப்பதிவுகளை வழங்குவதற்கு கோத்தா பாரு நகராட்சி மன்ற அதிகாரிகள் சமயக் காரணங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த ஏடு கூறிக் கொண்டது.