ஐந்தாவது பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்கு எதிராக இயங்கிய தாம் இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குப் பிரச்சாரம் செய்வதின் மூலம் இரட்டை வேடம் போடுவதாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்துள்ளார்.
“இரட்டை வேடம் ஏதுமில்லை. யாராவது நன்கு செயல்படவில்லை என்றால் நான் யாருக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்வேன்,” என மகாதீர் சொன்னார்.
அவர் இன்று கோலாலம்பூரில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தில் மலேசிய பெட்ரோலிய மன்ற நிகழ்வு ஒன்றில் நிருபர்கள் அணுகிய போது அவர் அவ்வாறு கூறினார்.
“அவர் என் தேர்வாக இருந்தாலும் சரி வேறு யாருடைய தேர்வாக இருந்தாலும் சரி, யாராவது நன்கு செயல்படாமல் இருந்தால் நான் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன். பாக் லா நன்றாக செயல்படவில்லை,” என மகாதீர் சொன்னார்.
நஜிப்பின் செயல் திறன் குறித்து அவர் மனநிறைவு கொண்டுள்ளாரா என்பது அவருடைய பதிலின் அர்த்தமா என வினவப்பட்ட போது, “ஆம், நான் திருப்தி அடைந்துள்ளேன்,” என்றார்.
’13வது பொதுத் தேர்தல் தேதியை நிர்ணயிக்க வேண்டிய அவசியமில்லை’
“இல்லை, நாம் பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றுகின்றோம். மாமன்னரிடம் யோசனை தெரிவித்த பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்ததும் அரசாங்கம் தேதியை நிர்ணயம் செய்கின்றது,” என மகாதீர் தெரிவித்தார்.
தேர்தல் தேதியை நிர்ணயம் செய்வது அமெரிக்க யோசனை ஆகும் எனக் கூறிய அவர், நடப்பு முறையே தொடர வேண்டும் என்றார்.
“ஆமாம். நாம் அதனைத் தொடர வேண்டும். எப்போதும் நமக்குத் தாழ்வு மனப்பான்மை இருப்பதால் நாம் ஒவ்வொருவரையும் பின்பற்ற வேண்டும் என நான் நினைக்கவில்லை. புரோட்டோன் கார் உட்பட நாம் என்ன செய்தாலும் அது தவறாக கருதப்படுகின்றது,” என அவர் சொன்ன போது நிருபர்களிடைய சிரிப்பலை எழுந்தது.
கோளாறு ஏற்பட்டதால் தங்கள் வாகனங்களை பல பிரபலமான கார் நிறுவனங்கள் மீட்டுக் கொண்டுள்ளன. ஆனால் புரோட்டோனுக்கு அவ்வாறு நிகழ்ந்தது இல்லை என அவர் விளக்கினார்.
“ஆகவே தயவு செய்து உள்ளூர் பொருட்களை நன்கு பாராட்டுங்கள்,” என மகாதீர் கேட்டுக் கொண்டார்.
அவர் அந்தத் தேசியக் கார் நிறுவனத்துக்கும் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸுக்கும் ஆலோசகர் ஆவார்.
Petronas Techology Ventures நிறுவனத்துடன் இன்று கையெழுத்தான ஒர் உடன்பாட்டின் கீழ் புரோட்டோன் ஏழு எந்திரத் தொழில்நுட்பங்களையும் 117 காப்புரிமைகளையும் பெற்றுக் கொண்டது.