“பக்குவப்படுத்தப்பட்ட லைனாஸ் தொழில் கூடக் கழிவுகள் மலேசியாவில் விற்கப்படலாம் ஆனால்….”

குவாந்தான் கெபெங்கில் லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவு,  விதிக்கப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே மலேசியாவில் விற்கப்பட முடியும்.

அந்தக் கழிவு குறைந்த அணுக்கதிரியக்க சக்தியைக் கொண்ட செயற்கைக் கூட்டுப் பொருளாக (synthetic aggregates) மாற்றப்பட வேண்டும் என்பதும் அதனை வாங்குவதற்கான நிறுவனத்தைக் கண்டு பிடிக்க வேண்டும் என்பதும் அந்த இரண்டு  நிபந்தனைகளாகும்.

அந்த விஷயம் லைனாஸைப் பொறுத்தது என அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஜானிட்டி ஒங்கிலி புத்ராஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

“அவர்கள் சந்தையை கண்டு பிடிக்க வேண்டும். வாங்குவோர் இல்லை என்றால் லைனாஸ் அதனை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஏனெனில் அது அபாயகரமான பொருளாக இருக்காது,” என்றார் அவர்.

லைனாஸ் அந்த ‘புத்தாக்க’ தேர்வை வழங்கியது என்றும் அது நடவடிக்கை அனுமதிக்கான நிபந்தனைகளில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் “தொழிலியல் நோக்கங்களுக்குப் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படக் கூடிய சாதாரணப் பொருளாக” அந்தக் கழிவை மாற்றுவதே அந்த நிபந்தனையாகும்.

அதன் கீழ் பக்குவப்படுத்தப்படும் பொருட்கள் ஆபத்தானவை அல்ல. காரணம் ஒரு கிராமுக்கு 1 Becquerel -க்கும் குறைவான அணுக்கதிரியக்கத்தை வெளியேற்றும். அனைத்துலக தரத்தின் படி 5 Becquerel வெளியேற்றப்பட்டால் மட்டுமே அது அபாயகரமான பொருளாகக் கருதப்படும்.

என்றாலும் அந்தப் பொருள் சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் பார்வையில் வருவதால் விற்பனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் எல்லா சட்ட விதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் மாக்ஸிமுஸ் விளக்கினார்.

மற்ற மூன்று அமைச்சர்களுடன் இணைந்து அவர் நேற்று விடுத்த அறிக்கையை விளக்குமாறு இதற்கு முன்னர் அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

லைனாஸ் தனது நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் எல்லாக் கழிவுப் பொருட்களையும் அவற்றைப் பக்குவப்படுத்தும் போது கிடைக்கும் துணைப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் அவர்கள் சொல்லியிருந்தனர்.

மலேசிய நிறுவனங்களுக்கு அது விற்கக் கூடிய ‘செயற்கைக் கூட்டுப் பொருளுக்கும்’ அது பொருந்தும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

TAGS: