கெராக்கான் குழு கோத்தா பாரு சலூனில் முடி திருத்திக் கொண்டது

இரு பாலர் முடி திருத்தும் நிலையங்கள் மீது (சலூன்) கிளந்தான் அரசாங்கம் விதித்துள்ள சர்ச்சைக்குரிய விதிமுறைக்கு சவால் விடுக்கும் வகையில் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஆறு கெராக்கன் உறுப்பினர்கள் கோத்தா பாருவில் சலூன் ஒன்றில் தங்கள் முடியை திருத்தம் செய்து கொண்டனர்.

நெகிரி செம்பிலான் கெராக்கான் துணைச் செயலாளர் டேவிட் சூங் தலைமையில் சென்ற அவர்கள் திங்கட்கிழமை காலையில் நெகிரி செம்பிலானிலிருந்து புறப்பட்டு 12 மணி நேரத்தில் கோத்தா பாரு சென்றடைந்தனர்.

திங்கள் இரவு அங்கு தங்கிய அவர்கள் நேற்று காலையில் அந்த நகரில் உள்ள முடி திருத்தும் நிலையம் ஒன்றுக்குச் சென்று நான்கு முடி திருத்துவோரிடம் தங்கள் முடியைத் திருத்திக் கொண்டனர்.

அவ்வாறு தங்கள் முடியைத் திருத்திய அனைவரும் பெண்கள் என்றும் தமது குழுவில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் இருந்தனர் என்றும் சூங் பின்னர் தெரிவித்தார்.

தாம் மட்டுமே முடியை வெட்டிக் கொண்டதாகவும் மற்றவர்கள் முடியைக் கழுவிக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.

“நாங்கள் அந்த சலூனில் ஒன்றரை மணி நேரம் இருந்தோம். ஆனால் கோத்தா பாரு நகராட்சி மன்ற அதிகாரிகள் யாரும் வரவில்லை,” என்றும் சூங் சொன்னார்.

நகராட்சி மன்ற அதிகாரிகள் வராதது குறித்து ஏமாற்றம் தெரிவித்த அவர், கோத்தா பாருவுக்கு உண்மை நிலை அறிய பெரிய குழு ஒன்றை அனுப்புமாறு தாம் யோசனை கூறப் போவதாகவும் தெரிவித்தார்.

 

கிளந்தானில் இஸ்லாமியச் சட்டத்துக்கு சவால் விடுப்பதும் முஸ்லிம் அல்லாதருடைய வாழ்வு ஆதாரங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதே தங்கள் பயண நோக்கம் என்றும் சூங் குறிப்பிட்டார்.

 

TAGS: