மகாதீர்: உதவித் தொகை முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

உதவித் தொகைகள் உண்மையில் அதிகத் தேவையுள்ள மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக உதவித் தொகை முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

நடப்பு உதவித் தொகை விநியோக முறை குறிப்பாக பெட்ரோலிய உதவித் தொகை முறை பலவீனமாக இருப்பதால் அது தேவைப்படும் மக்களைச் சென்றடையவில்லை என்றும் அதற்குத் தகுதி பெறாதவர்களே அதனை அதிகம் அனுபவிக்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.

“ஆடம்பரமான பெரிய காரை வைத்துள்ள ஒருவர் தமது காருக்கு நிறைய பெட்ரோலை நிரப்பிக் கொள்கிறார். அதனால் அவருக்கு நிறைய பெட்ரோல் உதவித் தொகை கிடைக்கின்றது. ஆனால் சிறிய காரை ஒட்டுகின்ற இன்னொருவர் தமது காருக்குக் குறைவாகவே பெட்ரோலை நிரப்பிக் கொள்கிறார். அதனால் அவருக்கு கிடைக்கும் உதவித் தொகை குறைவாகவே உள்ளது.”

“பெரிய கார்களை ஒட்டுகின்றவர்கள் அதிக வருமானத்தைக் கொண்டவர்கள் என்பதும் சிறிய கார்களை ஓட்டுகின்றவர்கள் குறைந்த வருமானத்தைக் கொண்டவர்கள் என்பதும் நமக்கு நன்கு தெரியும். ஆகவே பெட்ரோல் உதவித் தொகை அது அதிகம் தேவைப்படுகின்ற மக்களைச் சென்றடையவில்லை,” என அவர் நேற்று முத்தியாரா டமன்சாராவில் நிருபர்களிடம் கூறினார்.

படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும்

உதவித் தொகை முறையைப் பயனுள்ளதாக மாற்றும் போது அதனை படிப்படியாக குறைக்கும் போதும் உதவித்தொகைகளை மக்கள் அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

அதன் வழி மக்கள் போட்டி ஆற்றல் நிறைந்த குடிமக்களாக திகழ முடியும் என்றார் அவர். உதவித் தொகைகளைக் குறைப்பதால் கிடைக்கும் நிதிகளைக் கொண்டு பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பொது வீடமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கருதுகிறார்.

“என்றாலும் உதவித் தொகைகளைக் குறைப்பதற்கு நமக்கு வலுவான அரசாங்கம் தேவை. என்னுடைய காலத்தில் நமக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தது. அதனால் அமலாக்குவது எளிதாக இருந்தது. மக்களுக்காக மற்ற திட்டங்களுக்கு பணத்தை மாற்றி விட முடிந்தது.”

“அரசாங்கம் பலவீனமாக இருந்தால் உதவித் தொகையைக் குறைத்தால் வாக்குகளை இழக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. அதுவும் ஒரு பிரச்னையே,’ என மகாதீர் மேலும் சொன்னார்.

பெர்னாமா

 

TAGS: