‘என்இபி-ஆல் மலேசியப் பொருளாதாரம் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டது’

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி)-யால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார்.

“என்இபி முழுவீச்சில் செயல்பட்டபோது மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது”, என்று புத்ரா ஜெயாவில் கருத்தரங்கம் ஒன்றைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது அவர் கூறினார். 

பெர்டானா தலைமைத்துவம் அதன் உரையாடல் தொடரில் ஏற்பாடு செய்திருந்த “சமுதாய சீரமைப்பு நடவடிக்கையின் எதிர்காலம்” என்னும் நிகழ்வில் பேசிய மகாதிர், என்இபி ஏற்படுத்திய சமுதாய சீரமைப்புக் கொள்கைகளால்தான் நிலைத்தன்மை உருவானது என்று வலியுறுத்தினார்.

என்இபி-இன் காரணமாக மலேசியா, சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற மற்ற நாடுகளை மட்டுமல்லாமல் சில மேம்பாடடைந்த நாடுகளையும் பொருளாதார வளர்ச்சியில் விஞ்சி விட்டது.

எனவே, என்இபி-ஆல் வளர்ச்சி குன்றியது என்றுரைப்பது உண்மையை மறுப்பதாகும் என்றாரவர்.

TAGS: