உள்துறை அமைச்சர் போலீஸ் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்கிறார் சிஐடி தலைவர்

உள்துறை அமைச்சர் போலீஸ் விவகாரங்களில் தலையிடுவதுண்டு என்று முன்னாள் போலீஸ் படைத் தலைவர் கூறியிருப்பதை கூட்டரசு போலீஸ் சிஐடி இயக்குனர் முகம்மட் பக்ரி ஜினின் மறுத்துள்ளார்.

போலீஸ் மேற்கொள்ளும் ஒவ்வொரு விசாரணையும் சட்டப்படிதான் செய்யப்படுகிறது, அதில் எந்தத் தரப்பும் தலையிடுவதில்லை என்று பக்ரி (இடம்) தெரிவித்ததாக மலாய்மொழி நாளேடான பெரித்தான் ஹரியான் செய்தி வெளியிட்டிருக்கிறது.

“குற்றத்துக்கு ஏற்பவே விசாரணை தீர்மானிக்கப்படுகிறது. விசாரணையின் எந்தவொரு அம்சமும் சட்டத்தை மீறாதிருப்பதை போலீஸ் எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்கிறது.

“விசாரணை மேற்கொள்ளப்படும்போது தனிப்பட்டவர்களோ, தரப்புகளோ தலையிடுவதில்லை”.நேற்று சிஐடி தலைவர்களின் கூட்டத்துக்குப் பின்னர் பக்ரி இவ்வாறு தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் கூறியது.

மூசா, தாம் போலீஸ் படைத் தலைவராக இருந்தபோது தமக்குத் தெரியாமலேயே உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன்  இளநிலை அதிகாரிகளுக்கும் ஒரு போலீஸ் மாவட்டத் தலைவருக்கும் உத்தரவுகள் பிறப்பித்தார் என்று கூறியிருந்தது பற்றி கேட்கப்பட்டதற்கு பக்ரி இவ்வாறு பதிலளித்தார்.