தற்காலிக நடவடிக்கை அனுமதி, கழிவை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக் கூறவில்லை என லைனாஸ் சொல்கிறது

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என தற்காலிக நடவடிக்கை அனுமதியில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என லைனாஸ் தொழில் கழகத் தலைவர் நிக்கோலஸ் கேர்ட்டிஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நிபந்தனையைப் பூர்த்தி செய்வதற்கு லைனாஸ் ‘கழிவுகளை ஏற்றுமதி செய்ய வேண்டும்’ அல்லது அதன் தற்காலிக நடவடிக்கை அனுமதி ரத்துச் செய்யப்பட வேண்டிய அல்லது நிறுத்தப்பட வேண்டிய நிலையை அது எதிர்நோக்கும் என நான்கு கூட்டரசு அமைச்சர்கள் விடுத்த கூட்டறிக்கைக்கு முரண்பாடாக அது அமைந்துள்ளது.

“மக்களுடைய அச்சத்தைத் தணிப்பதற்காக நாங்கள் எங்கள் சொந்தச் செலவில் அந்தப் பொருளை ஏற்றுமதி செய்வதை நாங்களே ஏற்றுக் கொள்வதாக தன்னார்வ அடிப்படையில் சொன்னோம்,” என கோர்ட்டிஸ் சொன்னதாக நேற்று வெளியான வால் ஸ்டீரிட் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அது அனுமதிக்கான நிபந்தனை அல்ல. அரசியல் விவாதம் சூடாக இருக்கும் வேளையில் அந்த நிலை  உண்மையான சட்டப்பூர்வ நிலைக்கு மாறாக  மிகைப்படுத்தப்பட்டுள்ளது.”

என்றாலும் அந்தக் கழிவை நாட்டுக்கு வெளியில் கொண்டு செல்வதற்கு லைனாஸ் கடப்பாடு தெரிவித்துள்ளது என்றும் அது தன்னார்வ அடிப்படையில் அமைந்தது என்றும் அரசாங்கம் அதனை தற்காலிக நடவடிக்கை அனுமதியில் நிபந்தனையாக சேர்த்துக் கொண்டது என்றும் அடையாளம் கூற விரும்பாத அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் சொன்னதாகவும் வால் ஸ்டீரிட் சஞ்சிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

லைனாஸ் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவை வர்த்தகப் பொருளாக மாற்ற முடியும் என்பதை லைனாஸ் இன்னும் நிரூபிக்கவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் அதற்கான தொழில் நுட்பம் இன்னும் அதன் தொழில் கூடத்தில் சோதனை செய்யப்படவில்லை. அந்தக் கழிவை வர்த்தக ரீதியில் பாதுகாப்பான ‘செயற்கைக் கூட்டுப் பொருளாக’ மாற்றி அனைத்துலக அளவில் விற்பனை செய்யப் போவதாகவும் லைனாஸ் அறிவித்தது.

அந்த யோசனையை வரவேற்ற அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஜானிட்டி ஒங்கிலி, அந்தப் பொருளை உள்நாட்டில் வாங்குகின்றவர்கள் இருந்தால் அதனை இங்கு விற்கலாம் என்றும் கூறியிருந்தார்.

லைனாஸ், அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் நிகழ வேண்டிய பொதுத் தேர்தலுக்கு முன்னதாக “முழுக்க முழுக்க அரசியல் காற்பந்தாகி விட்டது” என்றும் கேர்ட்டிஸ் கூறிக் கொண்டார்.

‘கருத்துக்கள் திரிக்கப்பட்டன’

இதனிடையே ஆஸ்திரேலியா நாளேடான சிட்னி மார்னிங் ஹெரால்ட்-க்கு வழங்கிய இன்னொரு பேட்டியிலும்  அந்த ‘அரசியல் காற்பந்து’ கருத்தை மீண்டும் வெளியிட்டுள்ளார்.

“அந்த அரசியல் வட்டத்துக்குள் நாங்கள் ஒர் அரசியல் காற்பந்தாகி விட்டோமா ? நல்லது, அதனை முடிவு செய்வது அந்த அரசியல் வட்டத்துக்குள் உள்ள மக்களே தவிர நாங்கள் அல்ல,” என்றும் அவர் சொன்னதாக அந்த ஏட்டில் கூறப்பட்டுள்ளது.

கழிவு நிர்வாகப் பிரச்னை மீது மலேசிய லைனாஸ் நிர்வாக இயக்குநர் மாஷால் அகமட் தெரிவித்த கருத்துக்களை ‘அரசியல் சார்புடைய’ மலேசிய செய்தி நிறுவனங்கள் திரித்து விட்டதாகவும் கேர்ட்டிஸ் சொன்னார்.

லைனாஸ் தொழில் கூடக் கழிவுப் பொருளை ஏற்றுமதி செய்ய முடியாது என்றும் அத்தகைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்துலக சட்டங்கள் தடை விதிப்பதாகவும் மாஷால் கூறியதாக டிசம்பர் 7ம் தேதி குவாங் மிங் டெய்லி என்னும் சீன மொழி ஏடு செய்தி வெளியிட்டதையே அவர் குறிப்பிட்டார்.

அந்தச் செய்தியை கடந்த ஞாயிற்றுக் கிழமை மலேசியாகினி உட்பட பல செய்தி இணையத் தளங்கள் வெளியிட்டன.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலையில் நான்கு அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை விடுத்தனர். “லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் எல்லாக் கழிவுகளையும் மலேசியாவுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட வேண்டும்” என்பது அதற்கு வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியில் கூறப்பட்டுள்ள ‘சிறப்பு நிபந்தனை’ என அந்த நால்வரும் தெரிவித்திருந்தனர்.

“அந்தக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் எல்லாப் பொருட்களும் அவற்றுள் அடங்கும். அந்த நிபந்தனையை அமைச்சரவையும் ஏற்றுக் கொண்டுள்ளது,” என்றும் அவர்கள் கூறினர்.

அதற்கு லைனாஸ் திங்கட்கிழமை இரவு பின்னேரத்திலேயே பதில் அளித்தது. மாஷால் அத்தகைய கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்றும் லைனாஸ் தெரிவித்தது. ஏற்றுமதிக்காக கழிவை ‘செயற்கைக் கூட்டுப் பொருளாக’ மாற்ற முடியும் என்றும் அது விளக்கியது.

அமைச்சர்கள் அறிக்கை தற்காலிக நடவடிக்கை அனுமதியை வழங்கிய அணுசக்தி அனுமதி வாரியம் கூறியதற்கு மாறாகவும் அமைந்துள்ளது. எல்லாக் கழிவையும் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு லைனாஸ் தெரிவித்துள்ள கடப்பாடு அனுமதியைக் கட்டுப்படுத்தும் நிபந்தனை அல்ல என அந்த வாரியம் தெரிவித்திருந்தது.

“அது அனுமதிக்கான நிபந்தனையாக எப்போதும் இருந்தது இல்லை. அவர்கள் அந்தக் கடப்பாட்டை தெரிவித்த போது நாங்கள் அதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். அனுமதியை வழங்குவது என வாரியம் முடிவு செய்தது,” என அதன் தலைமை இயக்குநர் ராஜா அப்துல் அஜிஸ் ராஜா அட்னான் செப்டம்பர் 7ம் தேதி கூறினார்.

 

TAGS: