தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள நாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் பொருட்டு தேசியப் பதிவுத் துறைக்கு ஊர்வலமாகச் செல்வதற்காக புத்ராஜெயாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர்.
காலை மணி தொடக்கம் அங்கு சென்றடையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் உள்ள நீதித் துறை வளாகத்துக்கும் தேசியப் பதிவுத் துறைக்கும் ஊர்வலமாகச் சென்றனர்.
அந்தப் பேரணிக்கு பிகேஆர் ஏற்பாடு செய்துள்ளது.
கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் அமைக்குமானால் நாடற்ற பிரச்னைக்கு வழி வகுத்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலோர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரது உருவப்படங்களைக் கொண்ட போலி சிவப்பு நிற அடையாளக் கார்டுகளை ஏந்தியுள்ளனர்.
குடியுரிமையைப் பெறுவதற்கான தங்கள் முயற்சியில் அரசாங்கம் தங்களைத் தோல்வி அடையச் செய்து விட்டது என்பதைக் காட்டுவதே அதன் நோக்கமாகும்.
‘உரிமைகளுக்குப் போராடுவோம்’, ‘அடையாளக் கார்டு உரிமைகளுக்குப் போராடுவோம்’ என்பது போன்ற பல சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கினர்.
பேரணி தொடங்குவதற்கு முன்னர் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன், காப்பார் எம்பி எஸ் மாணிக்கவாசகம், சுபாங் எம்பி ஆர் சிவராசா ஆகியோர் உரையாற்றினார்கள்.
தேசியப் பதிவுத் துறை அலுவலகத்தில் சில பிகேஆர் தலைவர்கள் கட்டிடத்துக்குள் நுழைவதைக் காண முடிந்தது. அது குறித்து மகிழ்ச்சி அடையாத சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்னும் அதிகமான மக்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
அந்தக் கட்டிடத்துக்கு அருகில் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் சிறிய வாக்குவாதம் மூண்டது.
அதிருப்தி அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் “Buka pintu!” (கதவைத் திறவுங்கள்) எனக் கூச்சலிட்டனர். அப்போது பக்காத்தான் தலைவர்கள் அவர்களை அமைதிப்படுத்த முயன்றனர். போலீசார் கட்டிடக் கதவுகளை மூடி விட்டனர்.