எங்கள் வீடமைப்புத் திட்டத்தைக் காப்பாற்ற வாருங்கள் என மலாய்க்காரர்கள் பிஎன் இளைஞர் பிரிவிடம் சொல்கின்றனர்

பினாங்கு மாநில அரசாங்கத்துக்கும் மாநில பிஎன் -னுக்கும் இடையிலான தாமான் மாங்கிஸ் நில விவகாரம் மீதான சர்ச்சை நின்று விட்ட நிலையில் தெலுக் கும்பாரில் மலாய் சமூகத்துக்கான குறைந்த விலை வீடமைப்புத் திட்டத்துக்காக போராடுமாறு பிஎன் -னை அரசு சாரா மலாய் அமைப்பு ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது.

2005ம் ஆண்டு தெலுக் கும்பாரில் கட்டப்பட்டிருக்க வேண்டிய 235 குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகளைக் கொண்ட அந்தக் கூட்டரசு அரசாங்கத் திட்டத்தை நிறைவேற்றுமாறு பினாங்கு மலாய் பேரவைத் தலைவர் ரஹ்மாட் இஸாஹாக் சவால் விடுத்தார்.

700 சதுர அடி பரப்பளவைக் கொண்ட அந்த வீடு ஒன்றின் விலை 35,000 ரிங்கிட் என ரஹ்மாட் சொன்னார். 2005ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட அது கூட்டரசு அரசாங்கத் திட்டம் ஆகும். அதன் மேம்பாட்டுத் திட்டம் அடுத்த மாதம் வரையில் செல்லுபடியாகும்.

“ஆனால் இன்று வரை ஒரு தூண் கூட அங்கு நிர்மாணிக்கப்படவில்லை. அந்த நிலம் தற்போது இடுகாட்டு நிலம் போலக் காணப்படுகின்றது,” என்றார் ரஹ்மாட்.

கூட்டரசு அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 2.2 ஏக்கர் பரப்புள்ள தாமான் மாங்கிஸ் ll திட்டம் புறக்கணிக்கப்பட்ட போது அதற்கு பல ‘திருப்பங்கள்’ கொடுக்கப்பட்டது ஏன் என அவர் வினவினார்.

“தாமான் மாங்கிஸில்  அந்த நிலத்தை வாங்கி வீடுகளைக் கட்டுவதற்குப் பொது நிதிகளை விரயம் செய்யும் போது ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள தெலுக் கும்பார் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது,” என அவர் மாநில பிஎன் -னிடம் வினவினார்.

“வெற்று வாக்குறுதிகளுடன் மடிந்து போன” தாமான் மாங்கிஸ் பொது வீடமைப்புத் திட்டம் பற்றி மேலும் பேசிக் கொண்டிருப்பதை மாநில பிஎன் இளைஞர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ரஹ்மாட் கேட்டுக் கொண்டார்.

தாமான் மாங்கிஸ் நிலத்தை பிஎன் திறந்த டெண்டர் மூலம் பெற விரும்பவில்லை என்பதையும் ‘அரசியல் தந்திரம்” மூலம் பெற விரும்புகிறது என்பதையும் குடிமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

 

TAGS: