வருகிறது: ரோஸ்மாவை பற்றி அனைத்தையும் கூறும் தீபாக் நூல்

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வணிகர் தீபாக் ஜைக்கிஷன் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மாவை மங்கோலிய மாது அல்தான்துயாவின் கொலை  சம்பந்தப்பட்ட  கதையுடன் தொடர்பு படுத்தி ஓர் 26 பக்க புத்தகம் எழுதப் போகிறார்.

ரோஸ்மா தமது சொந்த வரலாறு குறித்து எழுதத் திட்டமிட்டுள்ளார். அதில் அவருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கத் திட்டமிட்டுள்ளார். தமது புத்தகம் அதற்கு எதிர்வினையாக இருக்கும் என்று தீபாக் கூறினார்.

“டத்தின் ஸ்ரீ ரோஸ்மா தமது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிடுவதற்கு ஒரு மிக நல்ல முடிவை எடுத்துள்ளார்.

“எனது ஊடக நண்பர் ஒருவர் அளித்த ஓர் ஆலோசனைக்கு ஏற்ப, நானும் இரு புத்தகங்களை வெளியிடுவது என்ற அறிவிப்பைச் செய்வதற்கு இன்று காலையில் தீர்மானித்தேன்”, என்று தீபாக் இன்று மலேசியாகினியுடனான ஒரு நேர்காணலில் கூறினார்.

அடுத்தத் திங்கள்கிழமை வெளியிடப்படவிருக்கும் முதலாவது புத்தகம் 26 பக்கங்கள் கொண்ட ஒரு சிறிய புத்தகம் என்று அவர் கூறினார்.

“(இப்புத்தகத்தில்) எனக்குக் கிடைத்த முதல் அழைப்பில் தொடங்கி இன்று வரையில், என்ன நடந்தது என்பதைப் பற்றி இருக்கும், உண்மை, நடந்தவை அனைத்தும் இருக்கும்.

“எனக்கு ஏராளமான எஸ்எம்எஸ்களும் அழைப்புகளும் (ரோஸ்மாவிடமிருந்து) கிடைத்தன. நான் அவற்றை சேகரித்து எல்லாவற்றையும் இணைப்பேன்.”

அது ரோஸ்மா என்றார் தீபக்.

ரோஸ்மா எப்படி தம்மை உதவிக்குச் சேர்த்தது, தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியம் அவரது கணவர் பிரதமர் நஜிப்பை சம்பந்தப்படுத்தி செய்திருந்த முதலாவது சத்தியப் பிரமாணத்தை மாற்றி இரண்டாவது சத்தியப் பிரமாணம் செய்யவதற்கு கட்டாயப்படுத்த வைத்தது, மற்றும் அல்தான்துயாவின் கொலையைச் சுற்றியுள்ள மர்மங்கள் போன்றவற்றின் மீது அப்புத்தகம் கவனம் செலுத்தும் என்று தீபாக் கூறினார்.

அப்புத்தகம் “ஆயிரக்கணக்கில்” அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதோடு இணையதளத்திலும் பதிவு செய்யப்படும் என்று அந்த வணிகர் கூறினார்.

அவரது இரண்டாவது புத்தகம் அவரது முழு வாழ்க்கை வரலாறாக இருக்கும்.

அவரின் புத்தகம் ரோஸ்மாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடப்பட்ட அடுத்த நாள் வெளியிடப்படுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தீபாக் கூறினார்.

 

 

 

 

 

TAGS: