முன்னாள் தனிப்பட்ட துப்பறிவாளரான பி பாலசுப்ரமணியம் சர்ச்சையை ஏற்படுத்திய தமது இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுவதற்கு ஈடாக அவருக்கு பணம் கொடுத்த மனிதர் பிரதமருடைய இளைய சகோதரர் முகமட் நசிம் அப்துல் ரசாக் என கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன் பெயர் குறிப்பிட்டுள்ளார்.
“என்ன செய்ய வேண்டுமே அதனை செய்வதற்கு உதவி செய்ய அந்தக் கூட்டத்தில் டத்தோ நசிம் கலந்து கொண்டார் என ஏற்கனவே சொன்னதை நான் உறுதிப்படுத்துகிறேன், என்னுடைய பங்கு அனைவரையும் ஒன்று சேர்ப்பது தான்,” என அவர் நேற்று மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
பிரதமரது துணைவியார் ரோஸ்மா மான்சோரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்ற பின்னர் தாம் அவருக்கு ஆதரவாக அதனைச் செய்ததாக அவர் சொன்னார்.
கொலையுண்ட மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபுவை பிரதமர் நஜிப்புடன் தொடர்புபடுத்தி 2008ம் ஆண்டு ஜுலை மாதம் 3ம் தேதி முதலாவது சத்தியப் பிரமாணத்தை வெளியிட்ட பாலசுப்ரமணியம், அதனை மறுக்கும் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுமாறு தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிக் கொண்டுள்ளார்.
அந்த தனிப்பட்ட துப்பறிவாளர் இப்போது தமது குடும்பத்தாருடன் இந்தியாவில் நாடு கடந்து வாழ்ந்து வருகிறார். இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடவும் தம்மையும் தமது குடும்பத்தையும் நாட்டுக்கு வெளியில் கொண்டு செல்வதற்கும் தாம் ஒப்புக் கொண்ட பின்னர் தமக்கு ரொக்கப் பணம் கொடுக்கப்பட்டது என்றும்- இன்னும் அதிகமாக கொடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது- என்றும் பாலசுப்ரமணியம் கூறிக் கொண்டுள்ளார்.
அந்தப் பணம் ‘டத்தோ நசிம், அவரது வளங்களிலிருந்து’ கொடுக்கப்பட்டதாக தீபக் கூறிக் கொண்டார்.
அந்த ‘டத்தோ நசிம்’ பிரதமருடைய சகோதரர் என்பதை உறுதிப்படுத்துமாறு மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்ட போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ‘ஆமாம்’ எனப் பதில் அளித்தார்.
பாலசுப்ரமணியம் நேர்மாறாக மாறியதற்கு அவருக்கு 5 மில்லியன் ரிங்கிட் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. தமக்கு பல தவணைகளாக மொத்தம் 750,000 ரிங்கிட் மட்டுமே கிடைத்தது என்றும் பின்னர் அவை நிறுத்தப்பட்டு விட்டன என்றும் பாலசுப்ரமணியம் கூறிக் கொண்டுள்ளார்.
பிரதமருடைய இளைய சகோதரருடைய பதிலைப் பெறுவதற்காக அவருடன் தொடர்பு கொள்வதற்கு மலேசியாகினி மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. என்றாலும் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசியப் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது நசிமும் மலேசியாகினி நிருபர்களும் நேருக்கு நேர் சந்தித்த போது “நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்று மட்டும் அந்தக் கட்டிடக் கலைஞருமான நசிம் சுருக்கமாக பதில் அளித்தார்.
அது போன்று பாலசுப்ரமணியத்தின் குற்றச்சாட்டுக்களை பிரதமரும் “அற்பமான அறிக்கைகள்” எனக் கூறி நிராகரித்தார்.
அதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக நசிம் அலுவலகத்துக்கு பல கேள்விகளைக் கொண்ட பட்டியலை அனுப்பியது. ஆனால் எந்தப் பதிலும் இல்லை. அவருடன் பேசுவதற்கும் அவரது அலுவலகத்துக்குச் செல்லவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.