நாடற்றவர்கள் பிரச்னையை 55 ஆண்டுகளாக தீர்க்க இயலாத மஇகா, புதிதாக எழுந்த அரசியல் விழிப்புணர்ச்சியால் நிகழ்ந்த மாற்றத்தின் தாக்கத்தைத் தனது சாதனை என்று கூறுவது ஏமாற்றத்தை அளிப்பதாக சுவராம் மனித உரிமை கழகத்தலைவர் கா. ஆறுமுகம் கூறுகிறார். [VIDEO | 05:46mins]
நாடு விடுதலை அடைவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே அம்னோவுடன் கூட்டு சேர்ந்து ஆறு பிரதமர்களுடன் 52 ஆண்டுகளை ஓட்டி விட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக 13-ஆவது தேர்தலுக்கு தயாராகும் நஜிப்பின் ‘நம்பிக்கை’ திட்டத்தில் குளிர் காயும் மஇகா இந்தியர்களின் பிரச்னைகளுக்கான தீர்வு பற்றி தன்மூப்பாக பேசுவது அரசியல் பலவீனம் என்கிறார் ஆறுமுகம்.
“பாக்காத்தான் கட்சிகள் நாடற்றவர்கள் பிரச்னையைப் பேசுவதை, மஇகா கையாளும் விதம் அதன் குறுகிய மனப்பான்மையைக் காட்டுவதோடு திவாலான அரசியலாக உருவாகி வருவதை உணர்த்துகிறது.”
மேலும் கூறுகையில், இந்தியர்களுக்கு இந்த அம்னோ மலாய்க்காரர்கள் அரசாங்கம், உண்மையாகவும் நேர்மையாகவும் தன்மதிப்பை அளித்து கௌரவமான வகையில் எந்த பிரச்னையையும் தீர்க்காது. இந்தியர்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர அல்லது மூன்றாம்தர மக்களாக வாழ்கிறோம் என்பதையும் மறுக்க இயலாது என்கிறார்.
“இதன் ஒப்பீட்டை நாம் நமது நாட்டின் வளர்ச்சியோடுதான் பார்க்க வேண்டும். மஇகா மட்டமானது என்று சொல்லவில்லை, அதனால் அம்னோவை இனியும் சமாளிக்க இயலாது. அம்னோ என்பது இனவாதமும் சமயவாதமும் கொண்ட வலுவான பணக்கார பலம் மிகுந்த கட்சி. அது ஓர் அமைப்பு முறையாகவே மாறி, தனது வேரை வலதுசாரி சித்தாந்த அடிப்படையில் உருவாக்கி அதன்வழி நாட்டை இயக்குகிறது. அதை அடக்க மாற்று வகையில் செயல்படும் மலாய்காரர்களால்தான் முடியும்.”
அந்த நிலை மட்டுமே சிறுபான்மை இந்தியர்களுக்குத் தங்களது உரிமைகளை நிலைநாட்டும் சூழலை உருவாக்கும். உதாரணமாக 2008-இல் தேசிய முன்னணி 2004-இல் பெற்ற வெற்றியை நிலைநிறுத்தியிருந்தால் மஇகா வாயை பொத்திக்கொண்டு அம்னோவுக்கு அடங்கி மேலும் நம்மை பலவீனமாக்கியிருக்கும். நமது உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டிருக்கும் என்றார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.
“இந்நாட்டில் குடிமக்களாக வாழும் நம்மிடையே நாடற்றவர்கள் என்ற நிலை இருக்க கூடாது என்பதில் உடன்பாடு உள்ளவர்கள் அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இந்த வழிமுறைகள் கடந்த 53 ஆண்டுகளாக கிடையாது. முதன்முறையாக 2011-இல் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதிவரையில் நாடு தழுவிய முறையில் பதிவு நடைபெற்றது. அதில் 9, 529 நபர்கள் பதிந்து கொண்டதாகவும், 14 மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 2012 வெளியான செய்தியின் படி 6,590 நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.”
ஆனால் அதேவேளை, புத்ராஜெயாவில் நடந்த நாடற்றவர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்களின் புலம்பல்கள் ஓய்வதாக இல்லை. அவர்களுக்குத் தேவை குடியுரிமை. அதை வழங்கும் அரசியல் கடப்பாடு அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். அது ஒருவருக்காகவோ அல்லது மூன்று லட்சம் பேருக்கோ என்பதாக இருக்கக் கூடாது.
மேலும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முறையான வழிமுறைகள் வேண்டும். நூற்றுக்கணக்கான நாடற்றவர்கள் பேரணியில் கலந்து கொண்டது அரசாங்கம் மேற்கொண்டுள்ள பதிவு மற்றும் பரிசீலனைகளில் திருப்தியற்ற சூழலையும் அதன் பலவீனத்தையும் காட்டுகிறது. அதை எப்படி நிவர்த்தி செய்வது என்பதை அரசாங்கம் செய்ய வேண்டும் என்கிறார் ஆறுமுகம்.