குவாந்தான் கெபெங்கில் உள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திருந்து வெளியாகும் கழிவை அணுக்கதிரியக்கம் இல்லாத பொருளாக மறு பதனீடு செய்யப்பட முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை செய்து பார்க்க வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறுகிறார்.
“எங்கள் நிலை ஒரே மாதிரியானது. அந்தத் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவில் காணப்படும் அணுக்கதிரியக்கம் ஒரு கிராமுக்கு 1 Becquerel-லுக்கு மேல் இருந்தால் அது ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலையாகும். அதனை எப்படி ஏற்றுமதி செய்வது என்பது லைனாஸைப் பொறுத்தது.”
“இரண்டாவதாக அணுக்கதிரியக்கத்தைக் கொண்ட கழிவை அணுக்கதிரியக்கம் இல்லாத பொருளாக மறு பதனீடு செய்து உள்நாட்டில் பயன்படுத்த இயலும் என்ற யோசனையை லைனாஸ் தெரிவித்துள்ளது. இப்போது அதனைச் சோதனை செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது,” என வீடியோ வழி விடுத்த ஒர் அறிக்கையில் சுவா கூறினார்.
என்றாலும் அந்த லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் ‘முக்கியமான தொழில்’ என அவர் குறிப்பிட்டார். அதனை எதிர்க்கின்றவர்கள் பிரச்னைக்கு அரசியல் சாயம் பூசி உணர்வுகளுக்கு இடம் கொடுக்கின்றனரே தவிர அறிவியல் ரீதியாகச் சிந்திக்கவில்லை என்றார் சுவா.
“அந்தத் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவில் அணுக்கதிரியக்கம் ஒரு கிராமுக்கு 1 Becquerel-லுக்கு மேல் இருந்தால் அது இந்த நாட்டில் இருக்கக் கூடாது. லைனாஸ் அதனைப் பின்பற்றுவதை நாங்கள் உறுதி செய்வோம்.”
அரசாங்கம் அந்த விஷயத்தை அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவில் மசீச-வைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் இடம் பெற வேண்டும் என்றும் சுவா பணித்துள்ளார்.
லைனாஸ் தொழில் கூடக் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என குற்றம் சாட்டப்பட்டதை மறுக்கும் வகையில் அந்த நிறுவனம், கழிவுப் பொருளை சந்தையில் விற்கப்படக் கூடிய குறைந்த அணுக்கதிரியக்கத்தைக் கொண்ட பொருளாக தான் மாற்ற முடியும் எனக் கூறியது.