பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க முயன்ற குற்றச்சாட்டிலிருந்து சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் விடுவிக்கப்பட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான், நியூயார்க் சென்றிருந்த போது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து பதவியை ராஜினாமா செய்ததுடன், இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து நியூயார்க் மாகாண தலைமை நீதிமன்ற நீதிபதி டக்ளஸ், இந்த வழக்கில் இருதரப்பினரும் சமரசத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளனர், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் இருந்து குற்றம்சாட்டியவருக்கு நஷ்டஈடு தர ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது என்று அறிவித்து, வழக்கை முடித்தார்.
வழக்கு விசாரணையின் போது டொமினிக் நேரில் ஆஜராகவில்லை. எனவே அவர் தரப்பு கருத்துகளை நேரடியாக அறிந்து கொள்ள முடியவில்லை.
மேலும் அப்பெண்ணுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட இருக்கிறது என்பதும் தெரியவரவில்லை. எனினும் பெரிய அளவில் தொகை வழங்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.