லைனாஸுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை அனுமதியை பொது மக்களுக்கு வெளியிடுவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறியிருக்கிறார்.
“அது எங்கள் கவனத்துக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை,” அவர் சொன்னார்.
லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் (LAMP) என அழைக்கப்படும் அதற்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை அனுமதி பொது மக்களுக்கு அறிவிக்கப்படுமா என கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவரிடம் வினவப்பட்டது.
ஒரு நிமிடம் மட்டுமே நிருபர்களைச் சந்தித்த அவர், அந்த விவகாரம் மீது இனிமேல் அமைச்சு எந்த அறிக்கையையும் வெளியிடாது என்றார்.
“இனிமேல் எந்த அறிக்கையும் இல்லை. நாங்கள் நிறைய நிறைய நிறைய அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம். தொழில்நுட்ப ரீதியாக ஏதும் தெரிய வேண்டுமானால் அணுசக்தி அனுமதி வாரியத்திடம் செல்லுங்கள்.”
“இது போதும். நாங்கள் சொல்வது முக்கியமல்ல. ஒரே விஷயம் தான்,” என்றார் அவர்.
தற்காலிக நடவடிக்கை அனுமதி மீது குழப்பம் எழுந்துள்ளது. அரிய மண் தொழில் கூடத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியின் கீழ் அது தனது அணுக்கதிரியக்கக் கழிவுகளை அகற்ற வேண்டும் என ஒங்கிலி உட்பட 4 அமைச்சர்கள் கூட்டாக விடுத்த மூன்று அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
என்றாலும் அத்தகைய நிபந்தனை ஏதும் இல்லை என்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பாதுகாப்பான பொருட்களை நாட்டுக்கு வெளியில் அனுப்புவதற்கு தன்னார்வ அடிப்படையில் முன்வந்துள்ளது என்றும் லைனாஸ் நிறுவன நிர்வாகத் தலைவர் நிக்கோலஸ் கேர்ட்டிஸ் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறித்து மலேசியாவில் எழுந்துள்ள கவலையைப் போக்குவதே அதன் நோக்கம் என அவர் சொன்னார்.
தற்காலிக நடவடிக்கை அனுமதியில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் மீது புத்ராஜெயாவிலிருந்தும் சிட்னியிலிருந்தும் முரண்பாடான அறிக்கைகள் வெளியாகிக் கொண்டிருப்பதால் அது குறித்த குழப்பம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. காரணம் பொது மக்கள் பார்வைக்கு அந்தத் தற்காலிக நடவடிக்கை அனுமதி வழங்கப்படவில்லை.