கெபெங்கில் அமைந்துள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவை மாற்றும் தனது திட்டத்தை ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான லைனாஸ் வெளியிட வேண்டும் என 80 அரசு சாரா அமைப்புக்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு கோரியுள்ளது.
மூன்று இதர ஆவணங்களுடன் லைனாஸ் அந்தத் திட்டத்தை வெளியிட மறுத்தால் அந்த நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை அனுமதியை அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சு நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்துச் செய்ய வேண்டும் என அந்த அமைப்புக்கள் கேட்டுக் கொண்டன.
Solidariti Hijau என அழைக்கப்படும் அந்த கூட்டமைப்பு தனது கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றை கோலாலம்பூரில் இன்று அந்த அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சமர்பித்தது.
பொது மக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என அந்த கூட்டமைப்பு கோரிய ஆவணங்கள் வருமாறு:
வெளியாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்;
காற்றிலும் சுற்றுச்சூழலிலும் தூசி பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கை திட்டம்;
நிரந்தரமாக கழிவுகளை அகற்றுவதற்கும் வைப்பதற்குமான திட்டம் மற்றும் கழிவு பராமரிப்புத் திட்டம்; கழிவுகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்படக் கூடிய வர்த்தகப் பொருட்களாக மாற்றுவதற்கு லைனாஸ் அறிவித்துள்ள புதுமையான அணுகுமுறை
“எழுப்பப்பட்டுள்ள எல்லா விஷயங்களும் தற்காலிக நடவடிக்கை அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும். அதற்குப் பின்னர் அல்ல,” என அந்தக் Solidariti Hijau கூட்டமைப்பில் அங்கம் பெற்றுள்ள பசுமையான தூய்மையான உலக அமைப்பின் தலைவர் சுல்கெப்லி முகமட் ஒமார் கூறினார்.
அவர் அந்த மகஜர் சமர்பிக்கப்பட்ட பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.