அந்த வீடியோவை முழுமையாகக் காட்டுங்கள் என தீபக் அம்னோ வலைப்பதிவாளர்களுக்குச் சவால்

deepakகம்பள வணிகரும் சொத்து மேம்பாட்டாளருமான தீபக் ஜெய்கிஷன், தாம் பிகேஆர் கைப்பாவை என ஒப்புக் கொள்வதாக காட்டிக் கொள்ளும் கத்தரிக்கப்பட்ட (எடிட் செய்யப்பட்ட)வீடியோவை இணையத்தில் சேர்த்த அம்னோ வலைப்பதிவாளர்கள் அந்த வீடியோவை முழுமையாக வெளியிட வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் இருப்பது தாம் தான் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். அந்த வீடியோ தமக்குத்  தெரியாமல் அம்னோ உச்ச மன்ற உறுப்பினருமான தமது “அணுக்கமான தனிப்பட்ட நண்பரை” சந்தித்த போது பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“அது என்னைப் போன்று தெரிகிறது, என்னைப் போன்று தொனிக்கிறது. ஆனால் அது நானல்ல” என்ற புகழ் பெற்ற சொற்றொடரைத் தாம் சொல்லப் போவதில்லை என அவர் புன்னகையுடன் கூறினார்.

என்றாலும் அந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது மீது அம்னோ வலைப்பதிவாளர்கள் சொல்லியுள்ள விஷயம் மீது அவர் கேள்வி எழுப்பினார். அதில் தமது கருத்துக்கள் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“நான் சொன்னது சொன்னது தான். தாங்கள் கேட்க விரும்புவதையே அவர்கள் எழுதுகின்றனர். தயவு செய்து அந்த வீடியோவை தொடக்கத்திலிருந்து இறுதி வரை வெளியிடுங்கள்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். கத்தரிக்கப்பட்ட வீடியோவில் இடம் பெற்றுள்ள வாசகம் பற்றியே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

“நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்தால் நான் சொன்னதிலிருந்து மாறுபட்ட வகையில் அவர்கள் வார்த்தைகளைத் தொகுத்துள்ளனர்.”

நான் அந்தச் சந்திப்புக்கு வந்தது முதல் நான் புறப்படும் வரையில் காட்டும் முழு வீடியோ ஒளிப்பதிவு உண்மையில் என்ன நடந்த்து என்பதையும் கத்தரிக்கப்பட்ட வீடியோவில் காட்டப்பட்டுள்ள பகுதிகளின் உண்மை நிலையையும் விளக்கும் என்றும் அவர் சொன்னார்.

“விலகுவதற்கு என்னிடம் ஏதுமில்லை. என்னிடம் மறைப்பதற்கும் எதுவுமில்லை,” என தீபக் சொன்னார்

“நான் பெயர்களையும் கொடுக்கப்பட்ட தொகையையும் குறிப்பிட்டுள்ளேன்.”

அந்த அம்னோ உச்ச மன்ற உறுப்பினரிடமும் வலைப்பதிவாளர்களிடமும் முழு வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும் என்றும் தீபக் நம்புகிறார்.deepak2

முதுநிலை அம்னோ மகளிர் தலைவி ஒருவர் தம்மை ஏமாற்றியதாக தாம் கூறிக் கொண்டுள்ள நிலப் பேரத்தை எளிதாக்குவதற்கு பணம் கொடுத்தது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் குடும்ப உறுப்பினர்கள் எனத் தாம் அந்த ரகசியக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதே அதற்குக் காரணம் என தீபக் எண்ணுகிறார்.

“நான் அந்த வீடியோவில் யார் அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டார்கள் எவ்வளவு பணம் எப்படிக் கொடுக்கப்பட்டது என்பதை அந்த வீடியோவில் விளக்கியுள்ளேன்,” என அவர் சொல்லிக் கொண்டார்.

“அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது வெளியானால் பிரச்னைகள் உருவாகும். இதனை நீங்கள் சொல்ல வேண்டாம் என்றனர்.”

சுபாங் ஜெயாவில் தனியார் வீடு ஒன்றில் நவம்பர் 30ம் தேதி அந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தீபக் சொன்னார்.

அதற்கு முன்னர் பெயர் தெரிவிக்கப்படாத அந்த அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் -அம்னோ பொதுக் கூட்டத்தின் இரண்டாம் நாளன்று சுபாங் ஜெயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தம்மைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த தமது நீண்ட கால நண்பருடைய பேச்சுத் தொனி நட்புறவாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்ட தீபக், அதன் விளைவாக சில ஊடக உறுப்பினர்களிடம் தெரிவிக்க நேர்ந்தது என்றார்.

அந்த நபர் பேசிய விதம் “இறுதி எச்சரிக்கை கொடுப்பதை” போல இருந்தது. “நான் என் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்தேன். ஆகவே ஊடகங்களுக்குச் சொன்னால் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன்.”

தாம் அந்த ஹோட்டலை அடைந்ததும் தமது நண்பர் சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த அம்னோ தலைவர் தமது இரு நண்பர்களையும் கூட்டத்துக்கு அழைத்திருந்தார் எனத் தீபக் குறிப்பிட்டார்.

அவர்களை “அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்கள்” என அடையாளம் கண்டு கொண்டதாகவும் ஆனால் அவர்களையும் அம்னோ உச்ச மன்ற உறுப்பினரையும் அடையாளம் தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

தமக்குத் தெரியாமல் வீடியோ பிடிக்கப்பட்டது நேர்மையற்ற செயலாக இருந்தாலும் “கனவான்” என்ற முறையில் தாம் அவர்களுடைய அடையாளத்தைச் சொல்லப் போவதில்லை என்றும் தீபக் தெரிவித்தார்.

“அவர்கள் ஆண்மை உள்ளவர்களாக இருந்தால் தாங்களாகவே வெளியில் வர வேண்டும்.”

deepak3அவருக்குப் பின்னால் முஹைடின் தரப்பு உள்ளதா ?

அந்த வலைப்பதிவாளர்கள் எனக்கு அருகில் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர், அந்த சந்திப்பின் போதுநிகழ்ந்த உரையாடலை மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமிரா மூலம் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது என்றும் தீபக் கூறினார்.

தாம் ஏன் பகிரங்கமாக விஷயங்களை ஏன் வெளியிட்டீர்கள், யார் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என அந்த மூவரும் என்னைத் துருவித் துருவி விசாரித்தனர் என அவர் வருணித்தார்.

“நான் ஏன் அந்த நடவடிக்கையை எடுத்தேன் ? யாராவது எனக்கு பின்னால் நிற்கின்றனரா ? அது முஹைடின் தரப்பா ? எதிர்த்தரப்பா ?”

இதற்கும் எதிர்த்தரப்புக்கும் அல்லது எந்த ஒரு அம்னோ தரப்புக்கும் சம்பந்தமில்லை என நான் அவர்களிடம் கூறியதாக தீபக் சொன்னார்.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் எந்த வழியிலும் சம்பந்தப்படவில்லை என்றும் தீபக் அவர்களிடம் கூறினார். என்றாலும் தனது வங்கி உத்தரவாதத்தை நிறுத்தி வைத்துள்ள மத்திய கிழக்கு வங்கி ஒன்றுடன் தமக்கு இருந்த பிரச்னை தொடர்பில் பெர்மாத்தாங் எம்பி-யுமான அன்வாரைச் சந்தித்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

வர்த்தகத்தில் தாம் வெவ்வேறு அரசியல் சிந்தனைகளைக் கொண்ட பலருடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் தீபக் சொன்னார்.

தம்மை ஏமாற்றியதாக தாம் கூறிக் கொள்ளும் அம்னோ மகளிர் தலைவி ஒருவருக்கு எதிரான தமது வழக்கில் சட்டப் பிரதிநிதித்துவம் இல்லாததால் கடைசி நேரத்தில் தாம் பிகேஆர் கட்சியின் சுபாங் எம்பி ஆர் சிவராசாவை தமது வழக்குரைஞராக கொண்டு வந்தததாகவும் அவர் தெரிவித்தார்.

அன்வாருடைய புதல்வி நுருல் இஸ்ஸா அன்வாரை தாம் சந்தித்ததாக கூறப்படுவதை தீபக் மறுத்தார்.

அன்வாருடன் தாம் பேசிய விவகாரம் தொடர்பில் அவருக்கு சில ஆவணங்களை அனுப்பியதையும் தொலைபேசியில் அவருடன் பேசியதையும் தீபக் ஒப்புக் கொண்டார்.

“நான் அவரை நாடாளுமன்றத்தில் பார்த்துள்ளேன். இரண்டு முறை என நினைக்கிறேன். அவரை பார்த்த போது நான் உணவு விடுதியில் இருந்தேன். நான் பார்த்தேன். அழகான பெண்கள் நாம் பார்க்கிறோம். ஆனால் நான் அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டதுமில்லை. அவரைச் சந்தித்ததும் இல்லை.”