கடந்த அக்டோபர் மாதம் துவா சொல்லாததற்காக கன்னத்தில் அறையப்பட்ட மூன்று ஒராங் அஸ்லி பிள்ளைகள் விவகாரம் கிளந்தான் மாநிலக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் இன்று தெரிவித்திருக்கிறார்.
அக்டோபர் மாதம் 23ம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவம் மீது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வினவப்பட்ட போது அவர் அதனைத் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் மசீச மண்டபத்தில் நிருபர்கள் அவரைச் சந்தித்தனர்.
அந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகள் “மேற்கொள்ளப்பட்டு வருவதாக” வீ கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
“மாநிலக் கல்வித் துறைக்கும் கல்வி அமைச்சுக்கும் சமர்பிக்கப்படும் ஒவ்வொரு புகாரும் விசாரிக்கப்படுவதோடு நடவடிக்கையும் எடுக்கப்படும் என நான் சொல்ல விரும்புகிறேன்,” என அவர் கூறினார்.