லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்புக் கூடத்திலிருந்து கழிவுப் பொருளை லைனாஸ் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவை மீது அமைச்சரவையும் லைனாஸும் விடுத்துள்ள முரண்பாடான அறிக்கைகள் தொடர்பில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையே பொய் சொல்லியிருக்க வேண்டும் என்றும் லைனாஸ் அவ்வாறு பொய் சொல்ல முடியாது என்றும் அவர் சொன்னார்.
“அந்த அறிக்கைகள் எந்தத் தரப்பை அடிப்படையாகக் கொண்டு விடுக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொள்ளும் போது லைனாஸ் உண்மையைச் சொல்வது தெளிவாகத் தெரிகிறது. முழு அமைச்சரவையும் பொய் சொல்கிறது,” என அவர் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
மலேசிய அரசாங்கம் வழங்கிய தற்காலிக நடவடிக்கை அனுமதி நாட்டுக்குள் கழிவுகள் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கிறது என ஆஸ்திரேலிய பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் லைனாஸ் குறிப்பிட்டுள்ளது. லைனாஸுக்கு அந்த நாட்டுப் பங்குச் சந்தையிடம் பொய் சொல்வதற்குத் துணிச்சல் இருக்காது என லிம் விளக்கினார்.
“மக்களிடம் பிஎன் பொய் சொல்வது எளிதாகும். எந்த விதமான தாக்கமும் இல்லாமல் கடந்த 55 ஆண்டுகளாக அது அதனைத் தானே செய்து வருகின்றது,” என்றார் அவர்.
“ஆனால் லைனாஸ் ஆஸ்திரேலிய பங்குச் சந்தையிடம் பொய் சொன்னால் கடுமையான விளைவுகள் ஏற்படும். அதனால் அதன் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட பல மூத்த அதிகாரிகள் நீக்கப்படவும் கூடும். அந்தப் பங்குச் சந்தையிலிருந்து கூட லைனாஸ் நிறுத்தி வைக்கப்படலாம்.”
“ஆகவே லனாஸ் பொய்களைச் சொல்லி ஆஸ்திரேலியப் பங்குச் சந்தையின் தண்டனையை எதிர்கொள்ளும் ஆபத்தை வரவழைத்துக் கொள்ளாது,” என்றார் லிம்.
லைனாஸ் நேற்று பங்குச் சந்தைக்கு சமர்பித்த அறிக்கை ஒன்றில் தற்காலிக நடவடிக்கை அனுமதி வெளியிடப்பட்டது தொடருகிறது என்றும் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது. உற்பத்தியாகும் எந்தக் கழிவையும் மலேசியாவிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை என்றும் லைனாஸ் அந்த சுத்திகரிப்புக் கூடத்தில் தனது நடவடிக்கைகளைத் தொடருவதற்கு சட்டப்பூர்வமான எந்தத் தடையும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.