டோக்கியோ: சர்ச்சைக்குரிய தீவில், சீன விமானம் ஒன்று அத்துமீறி பறந்ததால் ஜப்பானிய போர் விமானங்கள் அதிரடியாக சென்று அந்த விமானத்தை விரட்டியடித்தன.
சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது, ஷென்காகு தீவு. இந்த தீவை சீனா, ‘டையாயூ’ என்றழைக்கிறது. பண்டை காலம் தொட்டு, இந்த தீவு தங்கள் எல்லைக்குட்பட்டு இருப்பதாக சீனாவும், 1890ம் ஆண்டு முதல் இந்தத் தீவு தங்கள் வசம் இருப்பதாக ஜப்பானும், உரிமை கொண்டாடி வருகின்றன.
பிரச்னைக்குரிய இந்த தீவில், மனித நடமாட்டம் கிடையாது. இந்த தீவைச் சுற்றிலும் எரிவாயுவும், மீன்வளமும் அதிகம் உள்ளதால் சீனா இந்த பகுதியைப் பயன்படுத்த முயற்சிக்கிறது.
இதற்கிடையே, ஜப்பானிய ஆதரவாளர்கள், 150 பேர் செப்டம்பரில் இந்த தீவுக்கு சென்று தங்கள் தேசியக் கொடிகளை பறக்க விட்டனர். இதற்கு, சீனா கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய தீவுக்கருகே, சீன கடலோர காவல் படை கப்பல் நின்றிருந்தது. அந்த சமயத்தில், சீன அரசு விமானம் ஒன்று நேற்று, ஜப்பான் வான் எல்லைக்குள் பறந்தது. இதை கண்காணித்த, ஜப்பானிய கடற்படையினர் எட்டு போர் விமானங்களை ஏவி சீன விமானத்தை அந்த கடல் பகுதியிலிருந்து துரத்தியடித்தனர். இதனால் இந்த பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.