டமாஸ்கஸ்: சிரியாவில், அதிபர், பஷர் அல் ஆசாத் கட்டுப்பாட்டை இழந்து விட்டார். இதனால், கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலக கோரி எதிர்கட்சியினர் பல மாதங்களாக போராடி வருகின்றனர். சிரியா ராணுவத்தினர், கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகின்றனர். 21 மாதங்களாக இராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடக்கும் சண்டையில் 50 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். ஐந்து லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியும் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக மறுத்து விட்டார். இவருக்கு சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
சிரியா கிளர்ச்சியாளர்களை அங்கீகரிப்பதாக அமெரிக்கா அதிபர் ஒபாமா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் தெரிவித்திருந்தார். சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா ஆயுத சப்ளை செய்வதால் அந்நாட்டில் சண்டை தொடர்கிறது.
இதுகுறித்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் போக் டோனோவ் குறிப்பிடுகையில், “சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளது. அப்பாவி மக்கள் பலர் மடிவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார். கிளர்ச்சியாளர்கள் மீது, சிரியா ராணுவம், ‘ஸ்கட்’ ரகத்தை சேர்ந்த, நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை ஏவி தாக்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.