அன்வார் பிரதமராவதை ஆதரிக்கும் கர்பால், பாஸ் முக்கியமான நண்பன் என்றார்

1dapடிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் பினாங்கில் டிஏபி-இன் 16வது தேசியப் பேரவைக்கூட்டத்துக்கு வந்திருக்கிறார் என்று தெரிகிறது.

பேரவையைத் தொடக்கிவைத்து உரையாற்றிய அவர், 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் பிரதமராவதை டிஏபி வரவேற்பதாக கூறினார்,

அதே வேளை பாஸ் கட்சி “முக்கியமான நண்பன்” என்றும் அவர் குறிப்பிட்டார். கர்பால், முஸ்லிம்-அல்லாதவர்மீது பாஸ் இஸ்லாமிய கொள்கைகளை அமல்படுத்துவதைக் கடுமையாக குறை கூறி வருபவர் என்பது தெரிந்ததே.

“பாஸ் பக்காத்தானில் ஒரு முக்கியமான நட்புக்கட்சி. பாஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அது உறுதியான, நல்ல கொள்கைகளைக் கொண்ட கட்சி”, என்று கர்பால் கூற கூட்டத்தினர் கரவொலி எழுப்பினர்.

“நமக்கு எதிரி பாரிசான் நேசனல் என்பதை மறக்கக் கூடாது. பிஎன்னுடனான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தேசிய அளவில் பிஎன் இடத்தில் பக்காத்தானை வைப்பதற்கு இது ஒன்றுதான் வாய்ப்பு”, என்றாரவர்.

‘மூத்தோரை மறக்கலாகாது’

பக்காத்தானால் அதைச் செய்ய முடியும் என்பதில் தமக்கு ஐயமில்லை என்றாரவர். பினாங்கில் முதலமைச்சர் லிம் குவான் எங் தலைமையில் பக்காத்தான் அரசு திறம்பட செயல்படுவதே அதற்கோர் எடுத்துக்காட்டு.

“பக்காத்தான் பினாங்கில் செய்ததை புத்ரா ஜெயாவிலும் செய்ய முடியும்”, என்றார் கர்பால்.

1dap2முன்பு பாஸுடன் டிஏபி ஒத்துழைக்கும் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போது மலேசியாவின் அரசியல் சூழல் மாறிவிட்டது.

“நாமும் காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். இல்லையேல் காலம் நம்மை மாற்றிவிடும்.

“அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. ஆனால், நிரந்தர கொள்கைகள் இருப்பது அவசியம். டிஏபி அதன் கொள்கைகளை என்றும் விட்டுக்கொடுக்காது”, என்றார்.

கட்சியின் மூத்த தலைவர்களை மறந்துவிடக் கூடாது என்பதையும் கர்பால் பேராளர்களுக்கு நினைவுறுத்தினார். அவர்களின்றி கட்சி இவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்க முடியாது.

“அந்த மூத்தவர்கள் இல்லை என்றால் நீங்கள் இப்போதுள்ள இடத்துக்கு வந்திருக்க முடியாது. மூத்தவர்களின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடக்கூடாது”, என்றவர் கூற கூட்டத்தினர் ஆரவாரம் செய்து அதை வரவேற்றனர்.

லிம் கிட் சியாங், செங் மன் ஹின், காலஞ்சென்ற பி.பட்டு, பான் இயு தெங் போன்ற சிலரைப் பெயர் குறிப்பிட்ட அவர், அவர்களின் “வியர்வையையும் இரத்தத்தையும்” கொண்டு கட்டப்பட்டதுதான் டிஏபி என்றார்.

TAGS: