“ஒரு சிறுபான்மையினத்திற்கு எதிரான வன்முறை – கம்போங் மேடான் 2001” எனும் ஆய்வு நூல் வரும் செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு கோலாலம்பூர் சீன அசம்பிளி மண்டபத்தில் வெளியீடு காண உள்ளது. இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
அதனுடன் “இனி என்றும் வேண்டாம்- கம்போங் மேடான்” என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கத்தில் முனைவர் குவா கியா சூங், சயிட் இப்ராஹிம் மற்றும் இண்ட்ராப் ஆலோசகர் கணேசன் ஆகியோர் விவாதிப்பர்.
முனைவர் எஸ். நாகராஜனும் வழக்கறிஞர் கா. ஆறுமுகமும் எழுதியுள்ள “ஒரு சிறுபான்மையினத்திற்கு எதிரான வன்முறை – கம்போங் மேடான் 2001” எனும் இந்த ஆய்வு நூல், கம்போங் மேடான் வன்முறையை ஆழமாக ஆய்வு செய்கிறது; அத்துடன் அந்த வன்முறை சம்பவம் குறித்த சில புதிய தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
வரலாற்றில் கரை படிந்த அச்சம்பவம் பற்றிய தகவல்கள் அதிகமாக இல்லை. அது மறைக்கப்பட வேண்டிய சம்பவமன்று. அதன் வழி நாம் பாடங்களை பயில இயலும் என்பதைத்தான் இந்நூல் நோக்கமாக கொண்டுள்ளதாக இதன் வெளியிட்டாளரான சுவராம் மனித உரிமைக் கழகம் கூறுகிறது.
தனது முனைவர் பட்டத்திற்காக நாகராஜன் இந்த வன்முறை சம்பவத்தை ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இந்நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.