யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 ஏ பெற்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புரிந்த சாதனையை பாராட்டும் வகையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 304 தமிழ்ப்பள்ளி மாணவர்களை சிலாங்கூர் மாநில அரசு நேற்று கௌரவித்தது.
நேற்று காலை மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மண்டபத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 ஏ பெற்ற 44 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 304 மாணவர்கள் சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்கள் புரிந்த பாராட்டும் வகையில் அவர்களுக்கு சான்றிதழ்களையும், ரொக்க அன்பளிப்புக்களையும் சேவியர் ஜெயக்குமார் வழங்கினார்
யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சாதித்துக் காட்டிய தங்களது பிள்ளைகள் மேடையில் மாநில அரசால் கௌரவிக்கப்படும்போது அங்கிருந்த அவர்களது பெற்றொர்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தியதை அவதானிக்க முடிந்தது.
“வெற்றியடைந்துவிட்டோம் இனி எந்தப் பயமும் இல்லை என்று ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள். இனிமேல்தான் உங்கள் இலட்சியப் பாதைகள் பல முட்கள் இருக்கும். அவற்றை நீங்கள் சாமர்த்தியமாக கடந்து வரவேண்டும். அந்த உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுப்பதற்காகவே இந்த பாராட்டு விழா என மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், அன்பளிப்புகளையும் வழங்கிய பின்னர் உரையாற்றிய டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
இப்பாராட்டு விழாவில் 7 ஏ பெற்ற மாணவர்கள் மட்டும் கௌரவிக்கப்படுவதால் தேர்ச்சியடையாத மாணவர்கள் புறந்தள்ளப்படுவதாக எண்ணாதீர்கள். அவர்களையும் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவர் சமுதாயமாக வரும் காலங்களில் மேடை ஏற்றுவோம்; அதற்கான முயற்சியிலேயே சிலாங்கூர் மாநில அரசாங்கம் பல வேலைத் திட்டங்களில் இறங்கியுள்ளது எனக் கூறிய சேவியர் ஜெயக்குமார், தேர்ச்சியடைந்த நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்தும் தங்களது வெற்றிப் பாதையில் பயணிக்கவே இந்தப் பாராட்டு விழா எனக் கூறினார்.
கல்விதான் நமது ஆயுதம் அதைக்கொண்டுதான் நமது சமுதாயத்தை தலைநிமிர்த்த முடியும். ஆகவே தேர்ச்சி பெறாத நமது சக மாணவர்களையும் அரவணைத்துகொண்டு கல்வியில் துவண்டுவிடால் தொடர்ந்து போராடுங்கள். சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி போல் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பெரிய அளவில் தேர்ச்சி பெறவேண்டும் என அவர் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் புரிந்த சாதனையை கௌரவிக்கும் வகையிலும் அவர்கள் மென்மேலும் உயர்வதற்கு உற்சாகம் தரும் நோக்கத்திலும் சிலாங்கூர் மாநில அரசு இப்பாராட்டு விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாக சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல். சேகரன், செம்பருத்தியிடம் கூறினார்.
இந்நிகழ்வில் சுவராம் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், சிலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ஜி. குணராஜ் மற்றும் சிலாங்கூர் நடவடிக்கை குழு உறுப்பினர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.