பேராக்கில் நேற்று பிகேஆர் பிரச்சாரப் பஸ் தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் அந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள தாப்பா ஒய்வுத் தலத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
MediaRakyatNet என அழைக்கப்படும் பிரபலமான பிகேஆர் ஆதரவு இணையத்தளம் அந்தத் தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தது. அந்த பஸ்ஸின் கண்ணாடி உடைக்கப்பட்டதைக் காட்டும் படத்தையும் அது வெளியிட்டுள்ளது.
அந்தத் தகவலை பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தமது டிவிட்டர் கணக்கில் இன்று அதிகாலை மீண்டும் வெளியிட்டார். அந்த பஸ்ஸுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பேராக்கில் அன்வார் நிகழ்வுகள் இன்று திட்டமிட்டபடி தொடரும் என்றும் சைபுடின் அறிவித்தார்.
பின்னர் சைபுடினுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. தம்மிடம் மேல் விவரங்கள் ஏதுமில்லை என அவர் தெரிவித்தார். என்றாலும் சம்பந்தப்பட்ட தகவல்களைப் பெற்ற பின்னர் இன்று பின்னேரத்தில் பத்திரிக்கை அறிக்கையை வெளியிடுவதாக அவர் உறுதி அளித்தார்.