ஏ குகன் மரணத்துக்கு கான்ஸ்டபிள் வி நவிந்திரன் பலிகடாவாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை நடப்புத் துணைத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் மறுத்துள்ளார்.
போலீஸ் அலட்சியம் காட்டியதாக குகன் தாயார் தொடுத்துள்ள வழக்கில் ஒரு பிரதிவாதியான காலித், போலீஸ் விசாரணையில் எதுவும் மூடி மறைக்கப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் இன்று கூறினார்.
“அந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியானதும் நான் குகனை விசாரித்ததில் சம்பந்தப்பட்ட 9 அதிகாரிகளையும் சிலாங்கூர் போலீஸ் பட்டாளத் தலைமையகத்துக்கு இடம் மாற்றுமாறு நான் கேட்டுக் கொண்டேன்.”
விசாரணைக்கு அவர்கள் இடையூறு செய்யாமல் இருக்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்பட்டது,”என காலித் சொன்னார்.
காலஞ்சென்ற சுபாங் ஜெயா ஒசிபிடி ஏசிபி ஜைனல் ரஷிட் கூட்டம் ஒன்றை நடத்தி – ஒரு நபரை பலிகடாவாக தெரிவிக்குமாறு விசாரணைக்கு பொறுப்பேற்றிருந்த அதிகாரிகளிடம்- கேட்டுக் கொண்டாரா என குகன் குடும்பத்தின் சார்பில் வாதாடும் சிவராசா ராசைய்யா வினவிய போது “அது தமக்குத் தெரியாது” என காலித் பதில் அளித்தார்.
“குற்றவியல் சட்டத்தின் 330வது பிரிவின் கீழ் (காயத்தை ஏற்படுத்தியது) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது எனக்குத் தெரியும். அதனை ஏற்படுத்தியது ஒர் அதிகாரி என கண்டு பிடிக்கப்பட்டது,” என்றார் அவர்.
குகனுக்குக் காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்ட நவிந்திரன் கடந்த மாதம் அளித்த சாட்சியத்தில் தாம் போலீசாரால் கட்டாயப்படுத்தப்பட்டு பலிகடாவாக்கப்பட்டதாக கூறியிருந்தார்.