வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கற்பிக்கப்படுவதாக கூறியுள்ள குவா மூசாங் பிஹாய் தேசியப் பள்ளிப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அது பற்றி கல்வி அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும் என கல்வித் துணை அமைச்சர் முகமட் புவாட் ஸார்க்காஷி விரும்புகிறார்.
“பெற்றோர்கள் அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும். பின்னர் அந்தக் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை விசாரிக்குமாறு கிளந்தான் கல்வித் துறையை நான் கேட்டுக் கொள்வேன். அந்த விஷயத்தை நாம் முழுமையாக ஆராய வேண்டும்,” என அவர் சுருக்கமாகச் சொன்னார்.
கோம்பாக்கில் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றை தொடக்கி வைத்த புவாட்-டிடம் அந்த விவகாரம் பற்றி கருத்துரைக்குமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
போஸ் பிஹாய் கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கன்னத்தில் அறையப்பட்ட விவகாரத்தைக் காட்டிலும் பெரிய கல்விப் பிரச்னைகள் இருப்பதாக கம்போங் தென்ரிக்கைச் சேர்ந்த அரோம் அசிர் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.
200 பிள்ளைகளைக் கொண்ட பிஹாய் தேசியப் பள்ளியில் மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுவதாக அரோம் சொன்னார். கிளந்தானில் ஒரு கல்வி வாரம் என்பது ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலாகும்.
“ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமைதான் வருகின்றனர். அதனால் கற்பிக்க முடியாது. ஆகவே அவர்கள் திங்கள் முதல் புதன் வரை கற்பிக்கின்றனர். வியாழக்கிழமை நண்பலில் அவர்கள் வீடு திரும்புவதற்குத் தயாராகின்றனர். விடுதிகளுக்குத் திரும்புமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.”
அதற்கு முன்னஎ பிஹாய் தேசியப் பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் 24ம் தேதி நண்பகல் உணவுக்கு முன்னர் துவா சொல்லாததற்காக ஆசிரியர் ஒருவர் தமது புதல்விகளை கன்னத்தில் அறைந்ததாக மூன்று ஒராங் அஸ்லி பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர்.
அந்த போலீஸ் புகாரை தாங்கள் மீட்டுக் கொள்வதற்கு ஈடாக ஆசிரியர்கள் சிலர் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக டிசம்பர் 2ம் தேதி அலோங் பாண்டாக், ஹசான் அச்சோய், அத்தார் பெடிக் ஆகிய மூவரும் இன்னொரு போலீஸ் புகாரைச் சமர்பித்தனர்.
நவம்பர் 7ம் தேதி பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தின் போது ஆசிரியர்கள் அவ்வாறு லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும் அவர்கள் கூறிக் கொண்டனர். பாதிக்கப்பட்ட பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர்கள் 250 ரிங்கிட்டும் மாணவிகளை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் கூடுதலாக ஒவ்வொரு பிள்ளைக்கும் 50 ரிங்கிட்டும் கொடுக்க முன் வந்தனர் என்றும் அவர்கள் கூறிக் கொண்டனர்.
லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றிய விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தொடங்கியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.