இந்தோனேசியாவின் மூன்றாவது அதிபர் பிஜே ஹபிபி குறித்து மலேசியாவின் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின்(ஜாம்) எழுதிய கட்டுரை முறையற்றது அடாவடித்தனமானது என்று சாடியுள்ளார் இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங்.
அக்கட்டுரை இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்குமிடையில் நிலவும் நல்லுறவைக் கெடுத்துவிடலாம் என்றவர் சொன்னதாக பெர்னாமா அறிவித்துள்ளது.
இந்தோனோசிய அதிபர், பரஸ்பர மரியாதை, சகிப்புத்தன்மை மீது இருதரப்புப் பேச்சுகளில் கலந்துகொள்ள மலேசியாவுக்குப் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஜைனுடினை இவ்வாறு குறைகூறினார்.
டிசம்பர் 10ம் நாள் உத்துசான் மலேசியாவில் ஜைனுடின் எழுதிய கட்டுரையில், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் அழைப்பை ஏற்று டிசம்பர் 6-இல் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த ஹபிபியைக் கேலி செய்திருந்தார்.
ஹபிபி, மேலைநாடுகளின் பேச்சைக்கேட்டு கிழக்கு தீமோர் சுதந்திரம்மீது கருத்துக்கணிப்பு நடத்தியதாகவும் அதன் விளைவாகதான் அவரால் மிகக் குறைந்த காலமே- 17மாதங்களே- இந்தோனேசிய அதிபராக இருக்க முடிந்தது என்றும் ஜைனுடின் குற்றம் சுமத்தினார்.
அந்த வகையில் ஹபிபி தம் நாட்டுக்கும் இனத்துக்கும் துரோகம் இழைத்து விட்டார் என்றார் ஜைனுடின். ஹபிபியைப் போலவே அன்வாரும் மேலைநாடுகளின் கட்டுப்பாட்டுக்கு எளிதில் ஆட்படக்கூடியவர் என்ற ஜைனுடின், “இருவருமே ஏகாதிபத்யத்தின் நாய்கள்”என்று குறிப்பிட்டுக் கட்டுரையை முடித்திருந்தார்.
அக் கட்டுரையால் இந்தோனேசியாவுடனான உறவுகள் பாதிக்கப்படலாம் என்று கவலை ஏற்பட்டது. ஆனால், பாதிக்கப்படாது என்று பல நிபுணர்கள் கூறிய கருத்துகளை உத்துசான் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
ஆனால், இன்று அதன் வலைத்தளத்தைப் பார்த்தால் அக்கட்டுரை அங்கு இல்லை.