6பி திட்டத்தில் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டார்களா? சுஹாகாம் ஆராயும்

1ngoஅந்நிய தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான தெனாகானிதா, 6பி திட்டத்தின்கீழ் வேலை அனுமதிக்கு விண்ணப்பித்த அந்நிய தொழிலாளர்களின் புகார்களை ஆராயுமாறு மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) த்தைக் கேட்டுக்கொண்டு மகஜர் ஒன்றைக் கொடுத்துள்ளது.

அம்மகஜரில் அந்நிய தொழிலாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் தங்கள் உரிமைகள் மீறப்பட்டதையும் விவரித்துள்ளனர்.

6பி திட்டம் என்பது சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களுக்குப் பொதுமன்னிப்பு கொடுத்து அவர்களைச் சட்டப்பூர்வ தொழிலாளர்கள் ஆக்கும் திட்டமாகும்.

அத்திட்டத்தை மேற்கொள்ளும் பொறுப்பை அரசுதுறைகள் 55 நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தன. ஆனால், தொழிலாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்த புகார்கள்மீது அத்துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெனாகானிதா குற்றம் சாட்டியது.

1ngo1மகஜரில் கவனப்படுத்தப்பட்டிருக்கும் நிறுவனங்கள் தொழிலாளர்களின் கடப்பிதழ்களையும் வேலை அனுமதிக்கு அவர்கள் கொடுத்த கட்டணத்தையும் எடுத்துக்கொண்டன என்று தெனாகானிதா செயல் இயக்குனர் ஐரின் பெர்னாண்டஸ் கூறினார்.

தொழிலாளர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர்களின் தூதரகங்களும் உதவவில்லை.

அம்மகஜரை பெர்னாண்டஸ் நேற்று  சுஹாகாம் ஆணையர் டெட்டா சமனிடம் வழங்கினார்.

அதைப் பெற்றுக்கொண்ட டெட்டா சமன் “சாட்சியங்களையும் (புகார்தாரர்களின்) வாக்குமூலங்களையும் வைத்து சுஹாகாம் நடந்ததைக் கண்டறியும். அதன் பின்னர் முழு அறிக்கையை வெளியிடும்”, என்றார்..

நேப்பாளியான நானி ராம் (கோடுபோட்ட சட்டை அணிந்தவர்),26, தம் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனத்துக்கு அடிக்கடி சென்று விசாரித்ததாகக் கூறினார்.

ஆனால், அதன் பணியாளர்கள் உதவவில்லை. இழுத்தடித்தார்கள்.

“ஒரு வழக்குரைஞரின் உதவியை நாடினேன். என் கடப்பிதழைப் பெற்றுத்தர ரிம1,750 கேட்டார்”, என்ற நானி, வழக்குரைஞர் கேட்ட பணத்தைக் கொடுத்தார்.

ஆனால், அதன்பின்னர் வழக்குரைஞர் அவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.. முடிவில் எச்சரிக்கையும் விடுத்தார்: “இது மலேசியா; எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலோ அழைத்தாலோ குண்டர்களைக் கூப்பிடுவேன்”.

வங்காள தேசி அடிக்கப்பட்டார்

1ngo2இந்தோனேசியர்களான முகம்மட் யூசுப்பும் வாரியும் இதேபோன்றுதான் புகார் செய்துள்ளனர்.

“நான் ஏமாற்றப்பட்டேன். …..தயவு செய்து உதவுங்கள். எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்”, என்று கூறிய வாரி, இந்தோனேசிய தூதரகத்தை அணுகியபோது அது உதவவில்லை என்றார்.

மொஹ்பூப் மொலோக்,39, ஒரு வங்காளதேசி. சகா ஒருவருக்கு உதவ முகவர் நிறுவனத்துக்குச் சென்றபோது தாமும் ஏமாற்றப்பட்டு அடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

“அவர்கள் என்னுடைய கடப்பிதழை, பணத்தை, கடிகாரத்தை எடுத்துக் கொண்டார்கள். பிறகு ஒரு அறையில் வைத்து அடித்தார்கள்”, என்றவர் சொன்னார்.

அத்துடன் போலீசுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தவர்கள் அங்கு தங்களுக்கு “நண்பர்கள்” இருப்பதாகவும்  கூறினார்களாம்.

 

 

TAGS: