லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியை வழங்குவது என அரசாங்கம் செய்த முடிவை நிறுத்தி வைப்பதற்கு மூன்று குவாந்தான் குடியிருப்பாளர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.
“உண்மை நிலையிலும் சட்டத்தின் நிலையிலும் சரியானது” என செப்டம்பர் 8ம் தேதி குவாந்தான் உயர் நீதிமன்றம் அறிவித்த முடிவை மூன்று நீதிபதிகளைக் கொண்ட முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு ஏகமனதாக நிலை நிறுத்தி அவர்களுடைய விண்ணப்பத்தை நிராகரித்தது.
செலவுத் தொகையாக 20,000 ரிங்கிட் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அது ஆணையிட்டது. அதில் பாதித் தொகை லைனாஸ் மலேசியா சென் பெர்ஹாட்டுக்கும், லனாஸ் தொழில் நிறுவனத்துக்கும் செல்ல வேண்டும்.
எஞ்சிய தொகை அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருக்கும் அணுசக்தி அனுமதி வாரியத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும்.
நீதிபதி ராம்லி அலி தலைமை தாங்கிய நீதிபதிகள் குழுவுல் நீதிபதிகள் அஸ்ஹார் முகமட்டும் அஸியா அலியும் இடம் பெற்றிருந்தார்கள்.
நீதிபதி சட்டத்தைத் தவறாகப் பின்பற்றியிருந்தால் தவிர கீழ் நீதிமன்றங்களுடைய விருப்புரிமை அதிகாரத்தில் தலையிடுவது முறையீட்டு நீதிமன்றத்தின் பணி அல்ல என்று நீதிபதி ராம்லி தமது தீர்ப்பில் விளக்கினார்.
“உயர் நீதிமன்ற நீதிபதி உண்மை நிலையிலும் சட்டத்தின் நிலையிலும் சரியான முடிவை எடுத்துள்ளார். ஆகவே அந்த முடிவை நிராகரிப்பதற்கு தகுந்த காரணம் எங்களிடம் இல்லை,” என இரு தரப்புக்களின் வாதத் தொகுப்புக்களையும் செவிமடுத்த பின்னர் அவர் சொன்னார்.