இந்தோனிசியர்களை மிரட்ட முடியாது என்பதை உத்துசான் இப்போது புரிந்து கொண்டிருக்கும்

utusan“மகத்தான நாடு ஒன்றின் முன்னாள் அதிபரையும் நமது முன்னாள் துணைப் பிரதமர் ஒருவரையும் “ஏகாதிபத்தியத்தின் நாய்கள்” என அழைத்தது  வடிகட்டின முட்டாள்தனம். ஜைனுடின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.”

உத்துசானில் வெளியான ஜைனுடின் கட்டுரையை இந்தோனிசிய அதிபர் கண்டித்தார்

வெளிச்சமானவன்: அன்புள்ள இந்தோனிசிய அதிபர் சுசிலோ பம்பாங் யூதயோனோ அவர்களே, முன்னாள்அதிபர் பிஜே ஹபிபி அவர்களே, உத்துசான் மலேசியா வெளியிட்ட மடத்தனமான கருத்துக்கள் பற்றிக் கவலைப்பட  வேண்டாம்.

காரணம் அந்த முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின் எங்கள் நாட்டுக்கு ஒர் அவமானம். அவர் மலேசியாவுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவர் அமைச்சரவையில் இப்போது ஏன் இல்லை என்பதற்கு உங்களுக்குக் காரணம் தெரிந்திருக்கும்.

ரென் அலி: தமது எஜமானர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வேகத்தில் ஜைனுடின் அடிப்படை நாகரீகத்தைக் கூடமறந்து விட்டு முன்னாள் இந்தோனிசிய அதிபர் ஒருவரைத் தரக் குறைவாக எழுதி விட்டார்.

மக்கள் போற்றும் இந்தோனிசிய அதிபர் ஒருவர் தமது கட்டுரையை மறுப்பார் என அவர் ஒரு போதும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் இந்தோனிசியாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ஹிபிபி மண்ணில் நுழைவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

மலேசியாவில் பிறந்தவன்: அந்த ஜைனுடின் குறைந்த அறிவாற்றலைக் கொண்ட மூன்றாம் தரப்பத்திரிக்கையாளர் ஆவார். தமக்கு ஆணையிடப்படும் எந்தப் பல்லவியையும் பாடுவதற்கு அவர் தயாராக இருந்ததால் தமது கடந்த காலப் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

அந்த இனவாத அரசியல்வாதி சொல்லும் கருத்துக்கள் நாகரீகமற்றவை. அவர் சொல்லும் வாதங்களும் குறைபாடுகளும் ஆதாரம் இல்லாதவை. எதிர்த்தரப்புத் தலைவரை சிறுமைப்படுத்தும் வழக்கமான பணியையே அவர் செய்தார். அவ்வாறு செய்யும் போது இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் முன்னாள் அதிபரை வெளிப்படையாக அவமானப்படுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை உணரக் கூடிய அறிவாற்றல் அவரிடம் இல்லை. ஆம் உண்மையில் விவேகமே இல்லாதவர்.

கெளாத்தே: இந்தோனிசியாவில் முன்னாள் அதிபருடைய கௌரவத்தை நடப்பு அதிபர் பாதுகாக்கிறார்.மலேசியாவில் நமது முன்னாள் பிரதமர் நமது நடப்புப் பிரதமரை அவமானப்படுத்துகிறார். மற்ற முன்னாள் பிரதமரையும் தொடர்ந்து சாடுகிறார்.

அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அது என் பேச்சுரிமை என அவர் கூறிக் கொள்கிறார்.

ஆகவே இன்னொரு நாட்டு அதிபரை அவமானப்படுத்தக் கூடாது என்பதை அம்னோ அறியாதது வியப்பை அளிக்கவில்லை.

அடையாளம் இல்லாதவன்#32993250: ஜைனுடின் இதழியல் துறை நாகரீகத்தையே மீறி விட்டார். உண்மையில் உத்துசான் கூட்டத்திலிருந்து நாம் அதனைத்தான் எதிர்பார்க்க வேண்டும்.

மகத்தான நாடு ஒன்றின் முன்னாள் அதிபரையும் நமது முன்னாள் துணைப் பிரதமர் ஒருவரையும் “ஏகாதிபத்தியத்தின் நாய்கள்” என அழைத்தது  வடிகட்டின முட்டாள்தனம். ஜைனுடின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

முஷிரோ: ஜைனுடின் எப்போதும் தவறுகளையே செய்து கொண்டிருக்கிறார். உத்துசானுக்குத் தலைவராக இருந்த போது ஒரு முறை அவர் டாக்டர் மகாதீர் முகமட்டைப் பற்றி எழுதினார். அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர் பின்னர் மகாதீரை வானாளவப் புகழும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதற்காக அவருக்கு சலுகைகள் மீண்டும் கிடைத்தன. கோலாலம்பூரில் நிகழ்ந்த அமைதியான பேரணி மீது அரசாங்கம் நடத்திய தாக்குதல்களை ஆதரித்து அல் ஜாஸிரா தொலைக்காட்சியில் அவர் கருத்துக்களைத் தெரிவித்த போது மீண்டும் தவறு செய்தார்.

முகமட் அப்துல் மாலிக்: தங்கள் முன்னாள் தலைவரைப் பற்றி ‘தவறாக’ சொல்லப்பட்டது மீது இந்தோனிசியாஆட்சேபம் செய்தது நல்ல விஷயமாகும். மலேசியாவும் அந்த ஆட்சேபத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதே வேளையில் மலேசியாவைப் பற்றி இந்தோனிசிய நாளேடுகளில் வெளியாகும் செய்திகளையும் இந்தோனிசியா கவனிக்க வேண்டும்.

வெளிச்சமானவர்: சுசிலோ தமது மக்களால் நன்கு மதிக்கப்படும் தலைவர் ஆவார். நான் கடந்த முறை இந்தோனிசியாவுக்குச் சென்றிருந்த போது கவர்ச்சிகரமான சம்பளத்தைத் தரும் வேலை வாய்ப்புக்களுக்காக மலேசியர்கள் ஜகார்த்தாவுக்கு வருவது பற்றியும் அதே வேளையில் இலவசக் குடியுரிமைக்காக இந்தோனிசியாவின் உட்புறப்பகுதிகளைச் சேர்ந்த படிக்காத மக்கள் மலேசியாவுக்கு செல்வதையும் பற்றி அங்குள்ள மக்கள் கருத்துரைத்தனர்.

அவானி: தம்மை அதிபுத்திசாலியாகக் காட்டிக் கொள்ள முயன்ற யாரோ ஒருவர் தம்மை அறியாமலேயே தம்மை முட்டாள் என உறுதி செய்து விட்டார். தமது வாயை மூடிக் கொண்டிருக்க அவர் கற்றுக் கொள்ள வேண்டும்.

அகராதி: உத்துசான் வரம்பு மீறுகிறது. அது உறவுகளைப் பாதிக்காது என நிபுணர்கள் கூறிக் கொள்கின்றனர்.  நல்லது. ஆனால் இந்தோனிசிய அதிபர் அதனை ஒப்புக் கொள்ளவில்லை.

TAGS: