ஷாங்காயில் உள்ள வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் மீது புகார்

1voteவெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் அந்தந்த நாட்டிலுள்ள மலேசிய தூதரகங்களில் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அடிக்கடி கேட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மலேசியர்கள் அங்குள்ள தலைமைத் தூதரக பொறுப்பாளர் அலுவலகம் சென்று வாக்காளர்களாக பதிந்துகொள்ள முயன்றபோது அங்கு பதிவுசெய்ய இயலாது என்று கூறிவிட்டார்.

இவ்வாண்டு ஜூலையிலிருந்து வாக்காளர்கள் பதிவை ஷங்காய் தூதரக பொறுப்பாளர் அலுவலகம் நிறுத்திக்கொண்டிருப்பதாக தம் நண்பர்கள் தெரிவித்ததாக ஷங்காய் பெர்சே ஆதரவுக் குழுவின் உறுப்பினர் டான் யோக் சுவான் மலேசியாகினியிடம் கூறினார்.

“மேலிடத்திலிருந்து உத்தரவு இல்லை என்றுகூறி சாதாரண வாக்காளர்களைப் பதிவு செய்ய  தூதரகப் பொறுப்பாளர் அலுவலகம் மறுக்கிறது”, என்றவர் தெரிவித்தார்.

இது, வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் சாதாரண வாக்காளர்கள்காக பதிவு செய்துகொள்ளலாம் பிறகு சட்டதிருத்தம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் அஞ்சல் வாக்காளர்களாக மாற்றப்படுவார்கள் என்று இசி கூறிவருவதற்கு முரணாக இருக்கிறது.

1vote1இதற்குமுன் இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப்(இடம்), வெளிநாடுவாழ் மலேசியர்களிடையே வாக்காளர்களர்களாக பதிந்துகொள்வதில் ஆர்வம் குறைந்தே காணப்படுகிறது என்று ஏமாற்றம் தெரிவித்திருந்தார்.

ஷங்காயில்தான் இப்படி, ஆனால், நியு யோர்க், பெர்ன், பெங்கோக், லண்டன், டப்ளின், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள மலேசிய தூதரகங்கள் பதிவுச் சேவைகளை முறைப்படி வழங்கி வருகின்றன.

வெளிநாடுவாழ் மலேசியர்கள் அனைவரையும் அஞ்சல் வாக்காளார்களாக மாற்ற இசி தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்வதில் மும்முரமாக உள்ளது.  ஆனால், சாதாரண வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டிருப்பவர்கள் மட்டுமே அஞ்சல்வழி வாக்களிக்க முடியும்.

அதுவும், டிசம்பர் 31-க்கு முன்னதாக பதிவு செய்தவர்கள் மட்டுமே அவ்வாறு வாக்களிக்க தகுதி பெறுவர் என்றும் இசி கூறியது.

சாதாரண  வாக்காளர்களாக பதிவுசெய்ய முடியவில்லை என்பதுபோக, ஷாங்காயில் உள்ள பலர் தங்களுக்கு அதற்கான தகுதி இல்லை என்றாலும் தாங்கள் அஞ்சல் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.

ஷங்காயில் வசிக்கும் 54-வயது மலேசியரான வின்னி என்பார், தமக்குத் தெரியாமலேயே தாம் அஞ்சல் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்.

நடப்புச் சட்டத்தின்படியும் புதிய சட்ட திருந்தங்களின்படியும் வெளிநாடுகளில் முழு நேர மாணவர்களாக அல்லது அரசுப்பணியாளர்களாக அல்லது அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களாக இருப்போர் மட்டுமே அஞ்சல்வழி வாக்களிக்க முடியும்.

“1980-களில் வாக்காளராக பதிவு செய்தேன் தேர்தலில் வாக்களித்திருக்கிறேன். என் கணவர் சீனக் குடிமகன், என்பதால் அவருடன் ஷங்கார் சென்றேன். அதன்பின் வாக்களித்ததில்லை.

“அண்மையில் வெளிநாடுவாழ் மலேசியர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று கேள்விப்பட்டு ஷங்காய் தலைமைத் தூதரகப் பொறுப்பாளர் அலுவலகம் சென்று விசாரித்தேன். நான் ஏற்கனவே அஞ்சல் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

“நான் மாணவரோ, அரசுப் பணியாளரோ அல்ல. என் கணவரும் சீனக் குடிமகன் -அப்படியிருக்க எப்படி அஞ்சல் வாக்காளராக முடியும்?”.

தம் தோழி ஒருவரும் இதேபோல்தான் அஞ்சல் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருக்கிறார் என்று வின்னி கூறினார். அவரும் மாணவரோ, அரசுப் பணியாளரோ அல்ல..

இக்குறைபாடுகளை இசியிடம் தெரிவித்துள்ள மலேசியாகினி அதன் எதிர்வினைக்காகக் காத்திருக்கிறது.

TAGS: