எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒராங் அஸ்லி வாக்காளர்களுக்கு பிஎன் -னுக்கு வாக்களிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படும் பேராக் தாப்பாவில் நடைபெற்ற ‘மாதிரி வாக்களிப்பு’ மீது இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் பதவி துறக்க வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது.
ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை வழிகாட்டுதலுடன் ‘வாக்காளர் கல்விக்கு’ பிஎன் நடத்தியுள்ள அது “முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வழக்கமான” நடவடிக்கை எனக் கூறியுள்ள இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமாரை டிஏபி கட்சியின் தேசியப் பிரச்சாரப் பிரிவுத் துணைச் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி சாடினார்.
அந்த நிகழ்வில் தவறு ஒன்றுமில்லை என்றும் “பிரச்சாரத்தின் போது நன்கொடை கொடுக்கப்பட்டால் மட்டுமே அது குற்றமாகக் கருதப்படுவதோடு வாக்குகளை வாங்குவதாகவும் பார்க்கப்படும்” என்றும் வான் அகமட் சொன்னதாக பிரி மலேசியா டுடே செய்தி இணையத்தளம் நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.
வான் அகமட்டின் அறிக்கை “அதிர்ச்சி அளிக்கிறது என்றும் நம்ப முடியாததாகவும்” இருப்பதாக வருணித்த ஜைரில், இசி “நேர்மையற்ற அந்த நடவடிக்கையை எப்படி இவ்வளவு துணிச்சலாக கண் துடைப்புச் செய்ய முடியும் ?” என வினவினார்.
“அத்துடன் தேர்தல் பிரச்சார காலத்தில் நிகழாத வரையில் வாக்குகளை வாங்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கது என இசி சொல்ல வருகிறதா ? உண்மையில் அது அறிவுக்கு ஏற்புடையதா ?”
“ஆகவே மாணவர் ஒருவர் தேர்வின் போது மோசடி செய்யாத வரையில் அவர் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ளலாம் என நாம் சொல்லலாமா ?”
“இசி மீது இன்னும் எஞ்சியுள்ள சிறிதளவு நம்பிக்கையும் காப்பாற்றப்படுவதற்கு முழு இசி-யும் பதவி துறப்பதைத் தவிர வேறு வழி இல்லை,” என ஜைரில் சொன்னார்.
‘வாக்காளர் கல்வி’ என்ற போர்வையில் வாக்குகள் வாங்கப்படுவதையும் அரசியல் ஊழலையும் இசி அங்கீகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
வாக்களிக்கும் முறை குறித்து ஒராங் அஸ்லி மக்களுக்கு ஒராங் அஸ்லி விவகாரத் துறையும் பிஎன் -னும் பயிற்சி வகுப்புக்களை நடத்தியுள்ளதாக புதன் கிழமையன்று பேராக் பக்காத்தான் ராக்யாட் கூறிக் கொண்டது.
தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கும் செண்டிரிங் சட்ட மன்றத் தொகுதிக்குமான போலி வாக்குச் சீட்டுக்கள் எனத் தோற்றமளித்த இரண்டு காகிதத் துண்டுகள் அந்த ‘பயிற்சி வகுப்புக்களில்’ கலந்து கொண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்றும் அது மேலும் குறிப்பிட்டது.
பின்னர் அந்த ஒராங் அஸ்லி மக்கள் ஒராங் அஸ்லி விவகாரத் துறை அதிகாரி, தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் முன்னிலையில் போலி வாக்குச் சீட்டில் பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு ‘கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“அந்த இரண்டு போலி வாக்குச் சீட்டுக்களிலும் பிஎன் -னுக்கு வாக்களித்தவர்களுக்கு 5 கிலோ அரிசி வெகுமதியாக உடனடியாகக் கொடுக்கப்பட்டது,” எனப் பேராக் பக்காத்தான் விடுத்த அறிக்கை தெரிவித்தது
நேற்று தாப்பா பிஎன் தலைவரும் ஆயர் கூனிங் சட்ட மன்ற உறுப்பினருமான சம்சுதின் அபு ஹசான், சரியான முறையில் வாக்குகளைச் செலுத்துவதற்கு ஒராங் அஸ்லிக்களுக்குச் சொல்லிக் கொடுப்பதே தமது பிரிவு ஏற்பாடு செய்த அந்த நிகழ்வின் நோக்கம் என மலாய் மொழி நாளேடான சினார் ஹரியானிடம் அதனைத் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஒராங் அஸ்லி வாக்காளர்களிடையே செல்லாத வாக்குக்ள் அதிகமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் “பயிற்சிகளுக்கு” ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.
ஒவ்வொரு ஒராங் அஸ்லி வாக்காளருக்கும் ஐந்து கிலோ அரிசி கொடுக்கப்பட்டதை சம்சுதீன் ஒப்புக் கொண்டார். ஆனால் அது வாக்குகளைக் கவரும் நடவடிக்கை அல்ல என்றார் அவர்.