சீக்கிய அமைப்பு: அல்லாஹ் மீதான பாத்வா ‘சட்ட விரோதமானது, செல்லாது’

heraldமுஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு தேசிய பாத்வா மன்றம் தடை விதித்துள்ளது அரசமைப்புக்கு முரணானது என சீக்கிய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் மலேசிய குருத்துவார் மன்றம் கூறியுள்ளது.

கடந்த புதன் கிழமை பினாங்கு முப்தி ஹசான் அகமட் இரண்டாவது முறையாக கூறியுள்ளதாகக் கூறப்படும் அந்தத் தடை இரண்டு வழிகளில் தவறானது என அந்த மன்றத் தலைவர் ஜஹீர் சிங் விடுத்த அறிக்கை கூறியது.

முதலாவதாக அந்த பாத்வா முஸ்லிம் அல்லாதாருக்குப் பொருந்தாது. இரண்டாவதாக கூட்டரசு அரசமைப்பின் 11(4) பிரிவு முஸ்லிம்கள் மீது அத்தகைய தடையை விதிப்பதற்கு ஆதரவு அளிக்கவில்லை.

கத்தோலிக்க வெளியீடான ஹெரால்ட் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது 2009ம் ஆண்டு உயர் நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு முஸ்லிம் அல்லாதவர்கள் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் “அரசமைப்புக்கு எதிரானவை” எனக் கூறுவதையும் ஜஹீர் சிங் சுட்டிக் காட்டினார்.

ஆகவே ஹசான் அறிக்கை “அரசமைப்புடன் ஒத்துப் போக முடியாததாகும்” என்றார் அவர்.

“அத்துடன் பாத்வா என்பது அறிவரை நோக்கத்தைக் கொண்டதாகும். இந்த நாட்டின் உச்ச சட்டத்துக்கு (கூட்டரசு அரசமைப்பு) முரணான எந்த பாத்வாவும் சட்ட விரோதமானது செல்லாது.”

முஸ்லிம்களிடம் மற்ற சமயங்களைப் பரப்புவதற்கு தடை விதிக்கும் 11(4) பிரிவில் உள்ள சில சொற்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மாநிலச் சட்டங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியும் முஸ்லிம் அல்லாதாருக்குப் பொருந்தாது.”

“முஸ்லிம் அல்லாதார் அத்தகைய சொற்களைப் பயன்படுத்துவதற்கு  11(4) பிரிவு தடை விதிக்கவில்லை என்பதை முதலாம் ஆண்டு சட்டப் படிப்பு மாணவருக்குக் கூடத் தெரியும்,” என கூறிய ஜஹீர் சிங், ஹெரால்ட் மீதான தீர்ப்பு அதனை வலுப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

‘அல்லாஹ்’, ‘தாக்வா’,’ஹாஜி’, ‘மஸ்ஜித்’ போன்ற சொற்களை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என பினாங்கு முப்தி அலுவலகம் முடிவு செய்துள்ளதை அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு ஹசான் நினைவுபடுத்தியதாக சினார் ஹரியான் புதன் கிழமை செய்தி வெளியிட்டது.

“பக்காத்தான் ராக்யாட் ஆட்சியின் போது அந்த விதி அமலாக்கப்பட்டது. முதலமைச்சர் என்ற முறையில் லிம்-முக்கு அது தெரிவிக்கப்பட்டு அதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்,” என்றும் ஹசான் சொன்னதாக அந்தச் செய்தி குறிப்பிட்டது.

ஹெரால்ட் சஞ்சிகை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் முறையீடு செய்து கொண்டதற்காகவும் அதன் வழி அந்தச் சர்ச்சையை தீர்க்காமல் வைத்திருப்பதற்காகவும் பிரதமர் நஜிப் ரசாக்கை லிம் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் சாடியது பற்றி பினாங்கு முப்தி கருத்துரைத்தார்.

 

TAGS: