பெற்றோரை சென்று பார்க்காவிட்டால் தண்டனை; சீனாவில் புதிய சட்டம்

china_oldசீனாவில் வயதுக்கு வந்த பிள்ளைகள் தமது வயதான பெற்றோரை அடிக்கடி சென்று பார்ப்பதை கட்டாயமாக்கும் சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்திருக்கிறது.

அப்படி பெற்றோரை அடிக்கடி சென்று பார்க்காதவர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் கூறுகின்றது.

பிள்ளைகள் அடிக்கடி தமது பெற்றோரை சென்று பார்த்து நலன்விசாரித்துவர வேண்டும் என்று அந்தச் சட்டம் கூறுகிறதே ஒழிய, எவ்வளவு நாளைக்கு ஒரு தடவை கட்டாயமாகச் சென்று பார்க்க வேண்டும் என்பது குறித்து அது எதுவும் கூறவில்லை. இருந்தாலும் தவறினால் தண்டனை உண்டு என்று அது கூறுகின்றது.

பெருந்தொகையான முதிய பெற்றோர் அவர்களது பிள்ளைகளால் கவனிக்கப்படாமல் கைவிடப்படுகிறார்கள் என்று சீன ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

ஒரு 90 வயதான பெண்மணி அவரது மகனால், பன்றித்தொழுவத்தில் விடப்பட்டார் என்று அண்மையில் சீன அரசாங்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இப்படியாக இரண்டு வருடங்கள் அவர் பன்றித்தொழுவத்தில் கழித்திருக்கிறார்.

இப்படியாக பெற்றோர் கைவிடப்பட்ட தகவல்கள் அல்லது பிள்ளைகள் பெற்றோரின் சொத்துக்களை அபகரித்தமை குறித்த கதைகள் அல்லது முதியவர்கள் எவரும் கவனிக்காமல் தமது இருப்பிடங்களில் இறந்துகிடக்கும் கதைகள் சீன ஊடகங்களை அண்மைக்காலமாக நிறைத்து வருகின்றன.

சீனாவில் ஏற்பட்டுவருகின்ற துரித வளர்ச்சி அங்கிருந்த கூட்டுக்குடும்ப பாரம்பரியத்தை சிதைத்துவிட்டது.

சீன சனத்தொகையில் எட்டில் ஒரு பங்கினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். அவர்களில் அரைவாசியினர் தனிமையில் வாழ்கின்றனர்.

பெரிய தொழில்மயமான நகரங்களை நோக்கி பிள்ளைகள் வேலை வாய்ப்புக்காக சென்றுவிடுவதால், பெற்றோர் தமது கிராமங்களில், வீடுகளில் தனிமையில் வாடிவருகிறார்கள்.

சீனாவில் அமலில் ஒருக்கும் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தாலும், வாழ்வுக்காலம் அதீதமாக அதிகரித்திருப்பதாலும், குடும்பங்கள் பிரிந்துபோய் இருக்கும் விவகாரம் மோசமடைந்துவருகின்றது.

சீனாவில் 16.7 கோடிப்பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதிலும், 10 லட்சம் பேர் 80 வயதுக்கும் கூடியவர்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பல வயதான உறவினர்களை காப்பாற்ற ஒருவர் மாத்திரம் உழைத்தாக வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

இந்தப் பிரச்னைகளுக்கு மாற்றாக வயோதிபர்களுக்கான பராமரிப்பு நிலையங்கள் போன்ற சில வசதிகள் மாத்திரமே இருக்கின்றன.

ஏனையவர்கள் தனிமையில்தான் தற்போதைக்கு சிரமப்பட வேண்டியுள்ளது.

-BBC