“நன்மையோ தீமையோ இது நமது இல்லம். தாய் நாடு. நாம் இங்கு பிறந்தோம். நாம் இங்கு மரணமடைவோம்’
என் புத்தாண்டு விருப்பம் பழையதை விலக்கி புதியதை ஏற்றுக் கொள்வோம்
கேஎஸ்என்: உங்கள் புத்தாண்டு விருப்பத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன் அவர்களே. நான் அதில் சில வார்த்தைகளைச் சேர்க்க விரும்புகிறேன். அரசியல்வாதிகள் உடைக்க முடியாத நேர்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
அது பக்காத்தான் ராக்யாட்டுக்கும் பொருந்தும். அத்தகைய வேட்பாளர்களை அந்தக் கூட்டணி சேர்க்க முடியமானால் -அவர்கள் பொது மக்களுக்குத் தெரியாதவர்களாக இருந்தாலும்- அதனைச் செய்ய வேண்டும்.
நாடு இப்போது சென்று கொண்டிருக்கின்ற திசையை மாற்றுவதற்கு இந்த 2013ம் ஆண்டு புதிய திருப்புமுனையாக இருக்க வேண்டும். நாம் கிட்டத்தட்ட அந்த கட்டத்துக்கு சென்று விட்டோம். ஆகவே திருடர்களிடமிருந்தும் திறமையற்ற போலியானவர்களிடமிருந்தும் மலேசியாவைக் காப்பாற்றுவதற்கு நாம் இனிமேலும் ஒரு நாள் கூட விரயம் செய்யக் கூடாது.
பக்காத்தான் அரசாங்கத்தின் நிலைக்களனாக சமூக நீதி திகழ வேண்டும். சமய, இன விஷயங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. மனோகரன், உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். எல்லா மலேசியர்களும் இந்த நாட்டை நேசிக்கின்றனர். நல்வாழ்த்துக்கள்.
பெர்ட் தான்: மனோகரன் அது நல்ல புத்தாண்டு விருப்பம்தான். நீங்கள் வழக்கமாக ஹிண்ட்ராப்புடன் எதனையும் இணைக்கும் போக்கிலிருந்து நீங்கள் மாறுபட்டுள்ளீர்கள். நீங்கள் நடு நிலைப் பாதைக்கு வந்துள்ளீர்கள்.
நீங்கள் விவேகமானவர். அதனால் நீங்கள் பக்காத்தானில் விரிவான பங்கை ஆற்ற முடியும். ஆனால் நீங்கள் பரந்த அரசியல் நோக்கத்தில் இயங்க வேண்டும்.
இந்தக் கட்டுரை உங்களை வேறு கண்ணோட்டத்தில் நாங்கள் பார்க்க வைத்துள்ளது. நீங்கள் எழுப்பியுள்ள பிரச்னைகள் நம் நாட்டை பாதித்துள்ள சீர்கேடுகளை காட்டுகின்றது. ஊழலுக்கு எதிரான போராட்டம், குற்றச் செயல்களை முறியடிப்பது, சிறுபான்மை மக்களையும் அரவணைத்துச் செல்லும் சமூகத்தை தோற்றுவிப்பது, நன்கு திட்டமிடப்பட்ட கல்வி முறை, அரசியல் கலப்பற்ற சமயம், போட்டி ஆற்றல் மிக்க துடிப்பான பொருளாதாரம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
அடையாளம் இல்லாதவன் #37634848: மனோகரன், உங்கள் விருப்பங்கள் பக்காத்தான் பிரகடனம் செய்த கொள்கைகளைப் போன்றதாகும். ஆனால் அண்மைய காலமாக முஸ்லிம் அல்லாதவர்களும் சமய தீவிரவாதத்தில் இணைந்துள்ளனர்.
அத்தகைய விஷயங்கள் ரகசியமாக விவாதிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் இன ரீதியில் ஒன்றுபட்டு நிற்கும் போது கடந்த நான்கு ஆண்டுகளாக வகுக்கப்பட்ட திட்டங்களும் கடுமையான உழைப்பும் வீணாகி விடும்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் நிலை நிறுத்த முஸ்லிம் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அதனை வலியுறுத்தும் நிலையில் நீங்கள் இருக்கின்றீர்கள்.
எடுத்துக்காட்டு: மலேசியர்கள் தங்களுடைய இன அடையாளத்தை மறக்கக் கூடாது. எல்லா சமயங்களையும் மதிக்க வேண்டும். நாம் நேசிக்கும் இந்த நாட்டின் நன்மைக்காக நமது முழு ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்வதற்கு சமமான வாய்ப்பும் இடமும் வழங்கப்பட வேண்டும்.
நன்மையோ தீமையோ இது நமது இல்லம். தாய் நாடு. நாம் இங்கு பிறந்தோம். நாம் இங்கு மரணமடைவோம்.