நஜிப் தமது புத்தாண்டு செய்தியில் தெளிவான கட்டளை தேவை என்கிறார்

najibநாட்டை ஆளும் தமது பிஎன் அரசாங்கத்துக்குத் தெளிவான கட்டளையைத் தருமாறு மலேசியர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டை பிஎன் தனது ஆற்றலுக்கு இணங்க நிர்மாணிக்கும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

வரும் ஏப்ரல் 28ம் தேதி நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முடிவுக்கு வருகின்றது. அதனால் இவ்வாண்டு தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். அந்த 13வது பொதுத் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திடீர் தேர்தல் நடத்தப்படலாம் என 2012ல் தொடங்கிய ஆரூடத்துக்கு  இவ்வாண்டு முடிவு காணப்படும்.

அரசாங்கம், பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் பிஎன் அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டங்கள் கொண்டு வந்துள்ள சாதனைகளையும் நஜிப் தமது புத்தாண்டு செய்தியில் விளக்கினார்.

எதிர்காலத்தைப் பணயம் வைக்க வேண்டாம்

எதிர்காலம் மிகவும் பொன்னானது. ஆகவே சோதனை செய்வதற்கு அதனைப் பணயம் வைக்க வேண்டாம் என நஜிப் மக்களை கேட்டுக் கொண்டார். தமது கனவை நனவாக்குவதற்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் அவர் மலேசியர்களுக்கு அறிவுரை கூறினார்.

நாட்டை குறுகிய நேரத்தில் சீரழித்து விடலாம். ஆனால் அதன் விளைவுகள் நீண்ட காலத்துக்குத் தொடரும் என அவர் எச்சரித்தார்.

“இன்று பொறுப்பு நமது தோள்களைச் சார்ந்துள்ளது. மலேசியா தொடர்ந்து முன்னேற வேண்டுமா அல்லது பின் தங்க வேண்டுமா என்பதை நாம் நிர்ணயிக்க வேண்டும். வெற்றியை உறுதி செய்ய என்னுடன் இணைந்து கொள்ளுங்கள். நமது நாட்டுக்கும் நமது பிள்ளைகளுக்கும் மகத்தான எதிர்காலத்தை உருவாக்க என்னுடன் சேர்ந்து வேலை செய்யுங்கள்.”

“உங்களுடைய வலுவான ஆதரவு இல்லாமல் நடப்பு அரசாங்கம் உங்களுக்குச் சேவை செய்ய முடியாது. எங்களுக்கு தெளிவான கட்டளையைக் கொடுங்கள். அனைவருக்கு ஏற்புடைய மலேசியாவை எங்கள் ஆற்றலுக்கு இணங்க உருவாக்குவதாக நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்,” என நஜிப் தமது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

TAGS: