பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கும் ஒபாமாவின் கனவு மசோதா நிறைவேறியது

obamaவாஷிங்டன்: பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. ஏற்கனவே இம்மசோதா செனட் சபையிலும் நிறைவேறியுள்ளதால், நிதிநெருக்கடியில் இருந்து அமெரிக்கா விரைவில் விடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வர்ணிக்கப்படும் அமெரிக்கா தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகிறது. இதை தவிர்ப்பதற்காக, தான் மீண்டும் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பணக்காரர்களுக்கு அதிக வரி, மற்றும் அரசின் செலவுகளை குறைப்பது உள்ளிட்ட மசோதாக்களை கொண்டு வருவதாக ஒபாமா தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

இதன்படி, பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது தொடர்பான மசோதா நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட்டில் கொண்டு வரப்பட்டது. ஒபாமா சார்ந்திருக்கும் ஜனநாயக கட்சியினர் அதிகம் இருக்கும் செனட்டில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 89 ஓட்டுகளும், எதிராக 8 ஓட்டுகளும் கிடைத்தன.

இதையடுத்து, இம்மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த மசோதாவுக்கு குடியரசு கட்சிப் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து துணை அதிபர் ஜோ பிடன், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா மீதான ஓட்டெடுப்பு நேற்றிரவு நடந்தது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 257 ஓட்டுகளும், எதிராக 167 ஓட்டுகளும் கிடைத்தன. இரண்டு சபைகளிலும் ஒப்புதலை பெற்றுள்ளதையடுத்து, மசோதா அதிபர் ஒபாமாவின் ஒப்புதலோடு அமலுக்கு வரும்.

அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது அதிகம் பேசப்பட்ட இச்சட்டத்தின் படி, 98 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் அதிகப்படியான வரி விதிப்பில் இருந்து தப்பியுள்ளனர். அதே சமயம் பணக்காரர்களுக்கு மிக அதிக அளவில் வரி உயர்வு அமலுக்கு வரும்.

இதன்படி, தனிநபர் வருமானம் 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருந்தாலோ, அல்லது குடும்ப வருமானம் 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக இருந்தாலோ அவர்கள் பணக்காரர்களாக கருதப்பட்டு, அவர்கள் அதிக வரி செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, தற்போதைய நிதி நெருக்கடியில், இம்மசோதா மிகவும் அவசியம் என்றும், அப்போது தான் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.