பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் இரத்தக் கறை படிந்துள்ள துணி ஒன்று தம்மிடம் உள்ளது என்பதை கிட்டத்தட்ட உறுதியாக சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இருநூறு ஆண்டுகளுக்கும் முன் பிரஞ்சு புரட்சி நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களால் கிலட்டின் இயந்திரத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் மன்னர் பதினாறாம் லூயி ஆவார்.
இந்தத் துண்டியில் இருக்கும் ரத்தத்தின் மரபணுத் தகவலும், லூயிக்கு முன்னாள் வாழ்ந்த பிரஞ்சு மன்னன் ஒருவரின் பதப்படுத்தப்பட்ட சடலத்தின் மண்டை ஓட்டின் மரபணுத் தகவலும் கணிசமான அளவில் பொருந்திப்போகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பதினாறாம் லூயி பாரிசில் தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் பலர் வழிந்தோடிய மன்னனின் குறுதியில் தமது கைக்குட்டையை நனைத்து வைத்துக்கொண்டனர் என்று கூறப்படுகிறது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இந்த துணி இத்தாலிய குடும்பம் ஒன்றிடம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருவதாக கூறப்படுகிறது.